சுடச்சுட

  
  mamtha

  பாஜகவின் மிரட்டல்களுக்கும், அச்சுறுத்தல்களுக்கும் மேற்கு வங்கம் ஒருபோதும் அஞ்சி நடுங்காது என்று அந்த மாநில முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
  மேற்கு வங்கத்தில் அண்மையில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட பாஜக தலைவர் அமித் ஷா, மாநில அரசு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். மாநிலத்தில் பாஜக ஆட்சியமைக்கும் என்றும் அவர் சூசகமாகத் தெரிவித்தார். இந்நிலையில், அந்தக் கருத்துகளுக்கு பதிலடி தரும் வகையில் மம்தா இவ்வாறு கூறியுள்ளார்.
  மேற்கு வங்க மாநிலம், பீர்புரா பகுதியில் வியாழக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இதுதொடர்பாக அவர் மேலும் பேசியதாவது: கடந்த 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலின்போது பாஜக பல்வேறு வாக்குறுதிகளை அளித்தது. அவற்றில் கருப்புப் பணத்தை மீட்பதும் ஒன்று. ஆனால், இன்றளவும் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. அதுபோலத்தான் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் பிரச்னைகளுக்கும் தீர்வு காணப்படாமல் மத்திய பாஜக அரசு கிடப்பில் போட்டுவிட்டது.
  தற்போது திரிணமூல் காங்கிரஸைக் கண்டு பாஜக அச்சத்தில் உறைந்துள்ளது. அதன் காரணமாகவே சிபிஐ அமைப்பை தங்கள் கைகளில் வைத்துக் கொண்டு எங்களை அக்கட்சி மிரட்டப் பார்க்கிறது.
  அவர்களது அச்சுறுத்தல்களுக்கு திரிணமூல் காங்கிரஸோ, மேற்கு வங்கமோ அஞ்சி நடுங்காது. மாநிலத்தில் ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்பதில் பாஜக தீவிரமாக உள்ளது. ஆனால், அந்த ஆசை நிறைவேறாது.
  திரிணமூல் காங்கிரஸ் அரசு மேற்கொண்டு வரும் வளர்ச்சித் திட்டங்களுடன் எந்த வகையிலும் பாஜக ஆட்சியாளர்கள் போட்டியிட முடியாது. வளர்ச்சி விகிதத்தில் மத்திய அரசைக் காட்டிலும், மேற்கு வங்கம்தான் மேலோங்கி இருக்கிறது என்றார் அவர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai