சுடச்சுட

  

  பெங்களூரில் பாஜக அதிருப்தியாளர்கள் ஆலோசனைக் கூட்டம்

  By DIN  |   Published on : 28th April 2017 01:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பாஜக அதிருப்தியாளர்கள் ஆலோசனைக் கூட்டம் பெங்களூரில் வியாழக்கிழமை நடைபெற்றது.
  'பாஜகவைக் காப்போம்' என்ற முழக்கத்துடன் பெங்களூரு அரண்மனை மைதானத்தில் நடைபெற்ற இக் கூட்டத்தில் பாஜகவின் மூத்த தலைவர்களான சட்ட மேலவை எதிர்க்கட்சித் தலைவர் கே.எஸ்.ஈஸ்வரப்பா, எம்.எல்.சி. பானுபிரகாஷ், முன்னாள் எம்.எல்.ஏ. சொகடுசிவண்ணா, முன்னாள் அமைச்சர் ரவீந்திரநாத், கட்சியின் நிர்வாகி நிர்மல்குமார் சுரானா உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
  கூட்டத்தைத் தொடக்கிவைத்து கே.எஸ்.ஈஸ்வரப்பா பேசியது: பாஜகவில் உள்கட்சிப்பூசல் எதுவுமில்லை. பாஜகவைக் காப்பதற்காக கட்சியின் மூத்த தலைவர்களின் முயற்சியில் இக் கூட்டம் நடைபெறுகிறது.
  இதை கட்சி விரோத நடவடிக்கை என்று எப்படி கூற முடியும்? இது சங்கொல்லி ராயண்ணா படை கூட்டம் அல்ல. எடியூரப்பாவுக்கு எதிரான கூட்டமும் அல்ல. எடியூரப்பாதான் எங்கள் தலைவர் என்பதும், பாஜக ஆட்சி அமைந்தால் அவர்தான் முதல்வர் என்பதிலும் மாற்றுக் கருத்தில்லை.
  ஆனால், எடியூரப்பாவின் சர்வாதிகார தோரணை எங்களை வேதனை அடையச் செய்துள்ளது. கட்சியின் நிர்வாகிகளை நியமிப்பதில் உள்ள பாரபட்சத்தை போக்குமாறு கேட்டால் அதற்குப் பதில் இல்லை.
  இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் முரளிதர் ராவ் தலைமையில் கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா குழு அமைத்திருந்தார்.
  அக்குழுவும் இதுதொடர்பாக எந்த முடிவும் எடுக்கவில்லை. எடியூரப்பாவை சுற்றியிருப்பவர்கள் அவரை தவறாக வழிநடத்துகிறார்கள்.
  கட்சியைச் சீராக நடத்துங்கள் என்றால், எங்களை கட்சி விரோதிகள் என்கிறார்கள்.
  நாங்கள் பாஜகவைவிட்டு விலக மாட்டோம். எங்கள் தலையைக் கொய்தாலும் பாஜகவைவிட்டு வெளியேற மாட்டோம், புதிய கட்சியைத் தொடங்க மாட்டோம். பாஜகவின் கொள்கைகள், தொண்டர்களை மையப்படுத்தி அரசியல் நடத்துங்கள் என்று கூறுவதை எப்படி தவறு என்று கூற முடியும்.
  எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற மே 10-ஆம் தேதி வரை எடியூரப்பாவுக்கு வாய்ப்பு வழங்கியிருக்கிறோம் என்றார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai