சுடச்சுட

  

  ரயில்வே துறை தனியார்மயமாகாது: அமைச்சர் சுரேஷ் பிரபு திட்டவட்டம்

  By DIN  |   Published on : 28th April 2017 12:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  sureshprabhu

  ரயில்வே துறை தனியார்மயம் ஆக்கப்படமாட்டாது என்று ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
  இதுகுறித்து செய்தியாளர்களுக்கு அவர் புதன்கிழமை அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது:
  இந்திய ரயில்வேயை சாமானிய மக்களுக்கான, குறைந்த கட்டண சேவையளிக்கும் அமைப்பாக இனியும் தொடர முடியாது, அதனை தனியார்மயமாக்குவதுதான் புத்திசாலித்தனம் என்று சிலர் கூறுகின்றனர்.
  ஆனால், இந்தியாவில் ரயில்வே துறையை ஒருபோதும் தனியார்மயமாக்க முடியாது.
  சராசரி இந்தியர்கள் தங்களது பயணங்களுக்கான கடைசிப் புகலிடமாக இந்திய ரயில்வேயை நம்பியுள்ளனர். அவர்களுக்கு அத்தகைய சேவையை தொடர்ந்து அளிப்பதற்கான கடமையும், அதனால் ஏற்படும் கஷ்ட நஷ்டங்களை ஏற்றுக்கொள்ள வேண்டிய பொறுப்பும் அரசுக்கு உள்ளது.
  தனியார்மயமாக்கல் மூலம் ரயில்வே சந்தித்து வரும் எல்லா பிரச்னைகளையும் சரி செய்துவிடலாம் என்று நினைப்பது மிகவும் தவறு.
  உலகின் வெகு சில நாடுகள் மட்டுமே ரயில்வே துறையை தனியாரிடம் விட்டுள்ளன. பிரிட்டன் ரயில்வேயை தனியாருக்கு விற்றபோது, அதனை இத்தாலி அரசுக்குச் சொந்தமான நிறுவனம்தான் வாங்கியது. ஏனென்றால், ரயில்வே துறையை வாங்க எந்த தனியார் நிறுவனமும் முன்வராது.
  தற்போது இந்தியாவில் தனியார் நிறுவனங்கள் விமானப் போக்குவரத்தில் ஈடுபட்டுள்ளன. ஆனால், எந்த தனியார் விமான நிறுவனமாவது ரயில்வே துறையைப் போல விவசாயிகளுக்கான சிறப்பு விமானங்களை இயக்குமா? அரசின் வசம் இருக்கும் ரயில்வே துறை மட்டும்தான் அதில் பயணிக்கும் சாதாரண ஏழை மக்களை மனதில்கொண்டு செயல்பட முடியும்.
  பொதுமக்கள் நலனை அடிப்படையாகக் கொண்டு, லாபமற்ற வழித்தடங்களிலும் போக்குவரத்து மேற்கொள்ளப்படுவதால் ஏற்படும் இழப்பை அரசு ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். உலகம் முழுவதும் இதுதான் நடைமுறையில் உள்ளது. ஐரோப்பிய நாடுகளின் ரயில்வேக்களுக்கு ஏற்படும் இழப்பை ஈடு செய்ய, அந்த நாடுகளின் பொது பட்ஜெட்டிலேயே நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
  ஜப்பானில் ரயில்வே துறை தனியார்மயமாக்கப்பட்டாலும், லாபமற்ற வழித்தடங்களில் பொதுமக்கள் நலனுக்காக இயக்கப்படும் ரயில்களால் ஏற்படும் இழப்பை, அந்த நாட்டு அரசுதான் ஏற்கிறது. அதுபோல், இந்தியாவிலும் அத்தகைய இழப்பை அரசுதான் ஏற்க வேண்டும்.
  பொதுமக்களை அலட்சியம் செய்துவிட்டு நமது ரயில்வே துறையை தனியார்மயமாக்க முடியாது என்றார் அமைச்சர் சுரேஷ் பிரபு.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai