சுடச்சுட

    

    ரூ.110 கோடி கருப்புப் பணம்: 2 கணக்கு தணிக்கையாளர்களிடம் வருமான வரித் துறை விசாரணை

    By DIN  |   Published on : 28th April 2017 01:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராஜஸ்தான், ஹரியாணா ஆகிய 2 மாநிலங்களிலும் ரூ.110 கோடி கருப்புப் பணம் போலி நிறுவனங்கள் மூலம் சட்டப்பூர்வமானதாக மாற்றப்பட்டதை வருமான வரித் துறை அதிகாரிகள் கண்டறிந்தனர். இதற்கு கணக்குத் தணிக்கையாளர்கள் 2 பேர் உடந்தையாக செயல்பட்டதும் தெரியவந்துள்ளது.
    அவர்களிடம் வருமான வரித் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மீண்டும் விசாரணைக்கு ஆஜராகுமாறு அவர்கள் இருவருக்கும் விரைவில் வருமான வரித் துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்புவார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
    இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தில்லியில் வியாழக்கிழமை மேலும் கூறியதாவது:
    கடந்த சில தினங்களுக்கு முன்பு ராஜஸ்தான் மாநிலம், பிகானீர் நகரிலும், ஹரியாணா மாநிலம், ஜீந்த் நகரிலும் அதிரடி சோதனையில் ஈடுபட்டோம். அப்போது, சில போலி நிறுவனங்கள் கண்டறியப்பட்டன. அவற்றின் மூலம் பல கோடி ரூபாய் கருப்புப் பணத்தை கணக்குத் தணிக்கையாளர்கள் 2 பேர் சட்டப்பூர்வமாக்கி உள்ளனர்.
    பிகானீரில் இந்தச் செயலில் ஈடுபட்ட கணக்குத் தணிக்கையாளர் குஜராத் மாநிலம், சூரத் நகரைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.
    அவரிடம் விசாரித்ததில், கடந்த 5 ஆண்டுகளில் ரூ.90 கோடி கருப்புப் பணத்தை போலி நிறுவனங்கள் மூலம் சட்டப்பூர்வமாக்கியதை ஒப்புக் கொண்டார். ஜீந்த் நகரில் கடந்த 10 ஆண்டுகளில் ரூ.20 கோடி கருப்புப் பணத்தை சில கும்பல்களுக்காக வெள்ளையாக்கிக் கொடுத்ததாக மற்றொரு கணக்குத் தணிக்கையாளர் ஒப்புக் கொண்டார்.
    இவர்களின் இருவரின் அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனையின்போது வங்கி சேமிப்புக் கணக்குப் புத்தகங்கள், காசோலைகள்,
    முத்திரைத்தாள்கள், முத்திரைகள் (சீல்கள்), 'பான்' அட்டைகள் ஆகியவை கைப்பற்றப்பட்டன என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
    நாடு முழுவதும் உள்ள கணக்குத் தணிக்கையாளர்கள், மனை வணிக தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் ஆகியோரின் அலுவலகங்களில் கடந்த 1-ஆம் தேதி முதல் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். பிரதமர் அலுவலகத்திடம் இருந்து வந்த உத்தரவின் பேரில் இத்தகைய அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai