சுடச்சுட

  

  லோக்பால் சட்டத்தை கிடப்பில் போடுவதா? மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்

  By DIN  |   Published on : 28th April 2017 04:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  supreme_court

  ''லோக்பால் சட்டத்தை நடைமுறைப்படுத்தாமல், கிடப்பில் போட்டு வைத்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது'' என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
  ''லோக்பால் அமைப்புகளுக்கு உடனடியாக உறுப்பினர்களை மத்திய அரசு நியமிக்க வேண்டும்; எதிர்க்கட்சித் தலைவர் இல்லாததைக் காரணம் காட்டி, லோக்பால் அமைப்புகளுக்கு உறுப்பினர்களைத் தேர்வு செய்யும் பணியை மத்திய அரசு நிறுத்தி வைக்கக் கூடாது'' என்றும் உச்ச நீதிமன்றம் கண்டிப்புடன் தெரிவித்துள்ளது.
  அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் மீதான ஊழல் புகார்களை விசாரிப்பதற்காக, சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே தலைமையிலான ஊழலுக்கு எதிரான அமைப்பின் கடுமையான போராட்டத்துக்குப் பிறகு, லோக்பால் சட்டம் கொண்டுவரப்பட்டது.
  நாடாளுமன்றத்தில் கடந்த 2013-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட இந்தச் சட்டம், 2014-ஆம் ஆண்டு அமலுக்கு வந்தது. ஆனால், அதன் பிறகு லோக்பால் அமைப்புக்கு உறுப்பினர்கள் நியமிப்பதற்கான பணிகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
  லோக்பால் சட்டப்படி, லோக்பால் அமைப்பின் உறுப்பினர்களைத் தேர்வு செய்யும் குழுவில், பிரதமர், மக்களவைத் தலைவர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி, நீதித் துறையைச் சேர்ந்த பிரபலம் ஒருவர் ஆகியோர் இடம்பெற்றிருக்க வேண்டும்.
  ஆனால், தற்போது மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் இல்லை. இதன் காரணமாக, லோக்பால் அமைப்புக்கு உறுப்பினர்களைத் தேர்வு செய்யும் பணியில் தொய்வு ஏற்பட்டது.
  இந்நிலையில், லோக்பால் அமைப்புக்கு தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமிக்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில், 'காமன்காஸ்' என்ற தன்னார்வ அமைப்பு வழக்கு தொடுத்திருந்தது.
  இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அந்தத் தன்னார்வ அமைப்பின் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் சாந்தி பூஷண், ''லோக்பால் நியமனங்களை மத்திய அரசு வேண்டுமென்றே கிடப்பில் போட்டு வைத்திருக்கிறது'' என்று வாதிட்டார்.
  அதற்கு மத்திய அரசின் சட்ட ஆலோசகர் முகுல் ரோத்தகி பதிலளித்துப் பேசுகையில், ''மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் யார்? என்பதை முடிவு செய்யாமல் தற்போதைய நிலையில், லோக்பால் அமைப்புக்கு உறுப்பினர்களை நியமிக்க முடியாது; இந்த விவகாரம் மக்களவையில் நிலுவையில் உள்ளது'' என்று கூறியிருந்தார்.
  இந்த நிலையில், இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், நவீன் சின்ஹா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
  லோக்பால் சட்டம், செயல்படுத்தப்படக் கூடிய ஒன்றாகும். எதிர்க்கட்சித் தலைவர் இல்லாததைக் காரணம் காட்டி, லோக்பால் அமைப்புகளுக்கு உறுப்பினர்களைத் தேர்வு செய்யும் பணியை மத்திய அரசு இனிமேலும் நிறுத்தி வைப்பதை ஏற்க முடியாது. எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமலேயே, லோக்பால் அமைப்புக்கு உறுப்பினர்களைத் தேர்வு செய்யும் பணியை மத்திய அரசு முன்னெடுக்க வேண்டும்'' என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
  இந்த வழக்கு கடந்த நவம்பர் மாதம் விசாரணைக்கு வந்தபோது, லோக்பால் சட்டம் ஏட்டளவிலேயே இருப்பதை அனுமதிக்க முடியாது என்று மத்திய அரசிடம் உச்ச நீதிமன்றம் கண்டிப்புடன் தெரிவித்திருந்தது.
  545 உறுப்பினர்களைக் கொண்ட மக்களவையில் எதிர்க்கட்சி அந்தஸ்து பெறுவதற்கு குறைந்தது 10 சதவீத உறுப்பினர்கள் தேவை.
  ஆனால், அவையில் இரண்டாவது பெரிய கட்சியான காங்கிரஸுக்கு 45 உறுப்பினர்களே உள்ளதால், லோக்பால் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டது.
  உச்ச நீதிமன்றத்தின் கடுமையான விமர்சனத்துக்குப் பிறகு, லோக்பால் தேர்வுக் குழுவில், 'மக்களவை எதிர்க்கட்சித் தலைவர்' என்பதற்குப் பதிலாக, 'மிகப்பெரிய எதிர்க்கட்சியின் தலைவர்' என்ற அடிப்படையில் காங்கிரஸ் கட்சியை சேர்ப்பதற்கு மத்திய அரசு முடிவு செய்தது.
  இந்த சட்டத் திருத்தத்துக்கு நாடாளுமன்றம் இன்னமும் ஒப்புதல் அளிக்காததால், லோக்பால் உறுப்பினர்கள் நியமனம் தாமதாகி வருகிறது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai