சுடச்சுட

  

  இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம்: தினகரனின் ஹாவாலா ஏஜென்ட் நரேஷ் கைது

  By DIN  |   Published on : 28th April 2017 11:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ttvd

  புதுதில்லி:  இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாகக் கூறப்படும் வழக்கில் டிடிவி தினகரனுக்கு உதவியாக இருந்ததாக ஹாவலா ஏஜென்ட் நரேஷ் என்பவரை தில்லி போலீஸார் இன்று கைது செய்துள்ளனர்.

  இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாகக் கூறப்படும் வழக்கு தொடர்பாக தில்லி போலீஸார் டிடிவி தினகரனை நேற்று வியாழக்கிழமை பிற்பகலில் சென்னைக்கு அழைத்து வந்தனர்.

  சென்னை அடையாறில் உள்ள தினகரனின் இல்லத்துக்கு சென்ற போலீஸார் அங்கு அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். பின்னர் பெசன்ட் நகரில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று இதுவரை விசாரணை நடத்தி வருகின்றனர்.

  தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக லஞ்சம் கொடுக்க முயன்றதாக தில்லியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் சுகேஷ் சந்திரசேகர் என்பவரை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.1.3 கோடி புதிய ரூ. 2 ஆயிரம் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

  கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்திரசேகரிடம்  மேற்கொண்ட தீவிர விசாரணையில், "அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்தான் ரூ.1.3 கோடியை  கொடுத்தார். இதற்காக நாங்கள் சென்னை, கொச்சி, பெங்களூரு ஆகிய நகரங்களில் பல முறை அவருக்கு வேண்டியவர்களை சந்தித்துப் பேசினோம்' என்று கூறியதாக தகவல் வெளியானது.

  அதைத் தொடர்ந்து தினகரனுக்கு சம்மன் கொடுத்து தில்லிக்கு வரவழைத்து கடந்த 4 நாள்களாக விசாரணை நடத்திய தில்லி போலீஸார், செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் கைது செய்தனர்.

  பின்னர் புதன்கிழமை பிற்பகலில் தில்லியில் உள்ள நீதிமன்றத்தில் தினகரன் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்பின் ஜாமீன் கேட்டு தினகரன் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

  அதேநேரத்தில், அவரிடம் சென்னை, கொச்சி, பெங்களூரு ஆகிய இடங்களுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்த வேண்டியுள்ளதால், ஒரு வாரம் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க  அனுமதிக்க வேண்டும் என்று தில்லி போலீஸார் கோரிக்கை விடுத்தனர். அதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, 5 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

  இதைத்தொடர்ந்து பலத்த பாதுகாப்புடன் தினகரனை அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அதன், பின்பு பெசன்ட் நகரில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  இந்நிலையில், தாய்லாந்திலிருந்து தில்லி வந்த ஹாவாலா ஏஜென்ட் நரேஷை தில்லி போலீஸார் இன்று கைது செய்துள்ளனர்.

  இரட்டை இலை சின்னம் பெறுவதற்காக லஞ்சம் கொடுக்க சென்னையிலிருந்து கொச்சி வழியாக தில்லிக்கு ரூ.10 கோடியை நரேஷ் அனுப்பியதாக தகவல் வெளியானது இதற்கு தரகராக இருந்து செயல்பட்டவர் நரேஷ் என்பது போலீஸாருக்கு தெரியவந்ததது. இதையடுத்து போலீஸார் அவரை தேடி வந்த நிலையில், தாய்லாந்திலிருந்து தில்லி வந்த ஹாவாலா ஏஜென்ட் நரேஷை தில்லி போலீஸார் இன்று கைது செய்துள்ளனர்.

  தில்லியைச் சேர்ந்த நரேஷூக்கும் டிடிவி தினகரனுக்கும் நேரடித் தொடர்பு இருந்துவந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து நரேஷிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai