சுடச்சுட

  

  5 மணி நேர போராட்டத்துக்கு பிறகு குருகிராமில் பிடிபட்ட சிறுத்தை!

  By DIN  |   Published on : 28th April 2017 01:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  chita

  குருகிராம் அருகே உள்ள சோனாவில் வியாழக்கிழமை பிடிபட்ட சிறுத்தை.

  குருகிராம் அருகே உள்ள சோனா குடியிருப்பு பகுதியில் வியாழக்கிழமை புகுந்த சிறுத்தையை வனத்துறையினர் 5 மணி நேரம் போராடி உயிருடன் பிடித்தனர். சிறுத்தை தாக்கியதில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது.
  இதுகுறித்து குருகிராம் காவல் துறை உதவி ஆணையரும், செய்தித் தொடர்பாளருமான மணீஷ் சேகல் வியாழக்கிழமை கூறியதாவது:
  குருகிராமில் உள்ள குடியிருப்பு பகுதியில் சிறுத்தை ஒன்று புகுந்துவிட்டதாக காவல் துறைக்கு வியாழக்கிழமை காலை 9.30 மணியளவில் தகவல் கிடைத்தது. உடனடியாக குருகிராம் போலீஸாரும், வனத் துறையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்தோம்.
  அங்கு சிறுத்தை ஒன்று வீட்டின் மேற்கூரையின் வழியாக வீட்டிற்குள் புகுந்திருந்தது. அந்த வீட்டிற்குள் புகுவதற்கு முன்பு அஜய் பரத்வாஜ் என்பவரை அந்தச் சிறுத்தை தாக்கியிருந்தது.
  சிறுத்தை நுழைந்த வீட்டில் இருந்தவர்கள் மற்றொரு அறைக்குள் சென்று பூட்டிக் கொண்டனர். அசம்பாவித சம்பவம் ஏதும் நடைபெறாமல் தடுக்க அப்பகுதியில் இருந்தவர்களை அப்புறப்படுத்தி, பின்னர் ஐந்து மணி நேரம் போராட்டத்துக்கு பிறகு சிறுத்தையை மயக்க மருந்து துப்பாக்கியால் சுட்டு மதியம் 2.30 மணியளவில் பிடித்தோம்.
  சிறுத்தையின் நகங்களால் கீரப்பட்டு காயமடைந்திருந்த அஜய் பரத்வாஜுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது என்றார்.
  குருகிராம் அருகில் உள்ள ஆரவல்லி பகுதியில் ஏற்பட்டுள்ள வறட்சியின் காரணமாக தண்ணீர் தேடி வன விலங்குகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைகின்றனர். இதைத் தடுக்க குர்கான் மாவட்ட நிர்வாகமும், ஹரியாணா வனத் துறையும் இணைந்து ஆரவல்லி பகுதியில் தண்ணீர் குட்டைகளை ஏற்படுத்தி வருகின்றன என்று வனத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
  கடந்த ஆண்டு குருகிராமில் உள்ள மன்டாவர் கிராமத்தில் நுழைந்த சிறுத்தையை கிராம மக்கள் ஒன்று சேர்ந்து அடித்து கொன்ற சம்பவம் நடைபெற்றது நினைவுக்கூரத்தக்கது.

   

  பிடிபட்ட சிறுத்தையைக் காண குவிந்த அப்பகுதிமக்கள்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai