சுடச்சுட

  

  மூட நம்பிக்கையின் உச்சகட்டம்: ஜோதிடர் சொன்னதை நம்பி மழை வேண்டி மரத்தை வெட்டிய கிராமம்

  By ENS  |   Published on : 28th April 2017 04:00 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  cut_tree


  அனந்த்புர்: ஆந்திர மாநிலம் அனந்த்புர் மாவட்டத்தில் உள்ள குட்டலப்பள்ளி கிராம மக்கள் மழை வேண்டி, ஜோதிடர் சொன்னதற்காக, 100 ஆண்டு கால மரத்தை வெட்டி பலி கொடுத்துள்ளனர்.

  ஒரு காலத்தில் விவசாயம் தழைத்தோங்கி பசுமை நிறைந்த கிராமமாக இருந்த குட்டலப்பள்ளி, தற்போது அந்த சுவடுகள் மறைந்து வறட்சியின் கோரப்பிடியில் சிக்கியுள்ளது.

  பல வீடுகள் பூட்டப்பட்டுள்ளன. அங்கிருந்தவர்கள் பிழைப்புக்காக அண்டை மாநிலங்களுக்குச் சென்றுவிட்டனர். வயதானவர்களும், பள்ளிச் செல்லும் பிள்ளைகளும், ஒரு சில பெண்களுமே அந்த கிராமத்தில் இருக்கிறார்கள்.

  பருவ மழை பொய்த்துப் போனதால், குடிநீருக்கே தண்ணீர் இல்லாமல், கிராம மக்கள் தவித்து வருகிறார்கள். நிலத்தடி நீர் எத்தனை ஆழத்தில்தான் இருக்கிறது என்றே தெரியவில்லை.

  இந்த நிலையில்தான், மழை வேண்டிய ஏதேனும் பரிகாரம் செய்யலாமா என்று அருகில் உள்ள நல்லமடா பகுதியைச் சேர்ந்த ஜோதிடரை அந்த கிராம மக்கள் அணுகினார்கள். அவரும் கிராமத்தைப் பார்த்துவிட்டு ஒரு முடிவுக்கு வந்தார்.

  அதாவது, அந்த கிராமத்தின் மையத்தில் உள்ள கோயிலின் கோபுரத்தை விட, கிராமத்தில் இருந்து 100 ஆண்டுகள் பழமையான மரம் உயரமாக இருக்கிறது. இதனால், அந்த கோயிலின் உள் இருக்கும் தெய்வம் உங்களை சபித்துவிட்டது. எனவே தான் இந்த கிராமத்தில் மழை தவறிவிட்டது. மரத்தை வெட்டிவிட்டால், வருண பகவான் மனம் குளிர்ந்து உங்களுக்கு நிச்சயம் மழை தருவான் என்று கூறியுள்ளார்.

  இது சரியா, தவறா என்று கூட யோசிக்காமல், உடனடியாக ஆட்களை வைத்து, அந்த மரத்தை வெட்டித் தள்ளிவிட்டனர் கிராம மக்கள். அதோடு, கோயில் கோபுரத்தை விட, மரத்தின் உயரம் குறைந்து விட்டதா என்பதையும் அவர்கள் உறுதி செய்துகொண்டனர்.

  இதற்கு அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும், வயதானவர்கள் அதை சட்டை செய்யவில்லை.

  இந்த மரத்தின் நிழலில் தான் நாங்கள் விளையாடினோம். வெப்பத்தில் இருந்து எங்களை காக்க இந்த மரம் தான் உதவியது. ஆனால் என்ன செய்வது, இந்த மரத்தை வெட்டினால்தான் மழை பெய்யும் என்று ஜோதிடர் கூறிவிட்டாரே. அதற்காகத்தான் இதைச் செய்தோம். இப்போது வருண பகவான் எங்களை மன்னித்து, எங்களுக்கு மழை தருவார் என்று நம்புகிறோம் என்கிறார் கிராமத்தைச் சேர்ந்த முதியவர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai