சுடச்சுட

  

  ஆற்றுப்படுகையில் கட்டடங்கள்: கங்கை நதிக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!

  By DIN  |   Published on : 29th April 2017 02:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கங்கை ஆற்றங்கரையில் சட்டத்துக்குப் புறம்பாக கட்டடங்கள் எழுப்பப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவுக்கு உரிய பதிலளிக்குமாறு கங்கை நதிக்கு உத்தரகண்ட் உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
  இவ்வாறு கங்கைக்கு நோட்டீஸ் அனுப்பப்படுவது இதுவே முதன்முறையாகும்.
  உத்தரகண்டில் உள்ள காத்ரி கதாக் கிராமத்தில் கங்கை ஆற்றங்கரையோரங்களில் சட்டத்துக்குப் புறம்பாக பல்வேறு கட்டடங்கள் எழுப்பப்பட்டு வருவதை தடை செய்யக் கோரி அம்மாநில உயர் நீதிமன்றத்தில் ரிஷிகேஷைச் சேர்ந்த ஸ்வரூப் சிங் என்பவர் பொதுநல மனு தாக்கல் செய்தார்.
  இந்த மனுவானது நீதிபதிகள் வி.கே. பிஷ்ட், அலோக் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு விவரம்:
  கங்கை, யமுனை ஆகிய நதிகளின் புனிதத் தன்மையைக் கருத்தில் கொண்டும், அவற்றைப் பாதுகாக்கும் நோக்கத்துடனும் அவற்றுக்கு உயிர்ப்புள்ள மனிதர்கள் என்ற அந்தஸ்தை அளித்து இந்த நீதிமன்றம் அண்மையில் உத்தரவுப் பிறப்பித்தது.
  அதன்படி, இந்த நதிகளை மாசுபடுத்துவது என்பது மனிதர்களுக்கு தீங்கிழைப்பதற்கு சமமான குற்றமாகக் கருதப்படும். இந்நிலையில், கங்கையை மாசுபடுத்தும் வகையில் காத்ரி கதாக் கிராமத்தில் கங்கை ஆற்றங்கரையோரத்தில் கட்டடங்கள் எழுப்பப்பட்டு வருவது குறித்து மத்திய அரசு, மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், உத்தரகண்ட் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், ரிஷிகேஷ் நகராட்சி ஆகியவை வரும் மே 8-ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும். மேலும், உயிருள்ள மனிதர் என்ற அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளதால் இதுதொடர்பாக கங்கை நதியும் பதிலளிக்க வேண்டும் என நீதிபதிகள் தங்களின் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.
  மேலும், இதுதொடர்பாக மேற்குறிப்பிட்ட அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்புமாறும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai