சுடச்சுட

  
  susma

  பிரதமர் நரேந்திர மோடி-சைப்ரஸ் அதிபர் நிகோஸ் அனஸ்டாசியாட்ஸ் முன்னிலையில், இரு நாடுகளிடையே வெள்ளிக்கிழமை கையெழுத்தான ஒப்பந்தங்களை பரிமாறிக் கொள்ளும் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்

  இந்தியா - சைப்ரஸ் நாடுகளுக்கு இடையே 4 முக்கிய ஒப்பந்தங்கள் வெள்ளிக்கிழமை கையெழுத்தாகின.
  தில்லி வந்துள்ள சைப்ரஸ் நாட்டு அதிபர் நிகோஸ் அனஸ்டாசியாட்ஸ், பிரதமர் நரேந்திர மோடியை வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினார். அப்போது, இரு தரப்பு உறவுகள் குறித்தும், பிராந்திய விவாகரங்கள் குறித்தும் இருவரும் விரிவாக விவாதித்தனர்.
  இந்தச் சந்திப்புக்குப் பிறகு, இந்தியா-சைப்ரஸ் இடையே விமானச் சேவை, கடல் வழி வர்த்தகம் ஆகியவற்றை ஊக்குவிப்பது உள்பட 4 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
  பின்னர், சைப்ரஸ் நாட்டு அதிபருடன் பிரதமர் நரேந்திர மோடி கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது மோடி கூறியதாவது:
  இந்தியா-சைப்ரஸ் நாடுகளுக்கு இடையேயான இரு தரப்பு உறவுகள் குறித்தும், சர்வதேச பிரச்னைகள் குறித்தும் இருவரும் விரிவாக விவாதித்தோம். நமது பிராந்தியத்தில் வன்முறையை வளர்த்தெடுத்து, ஆதரித்து, புகலிடம் கொடுத்து வரும் நாடுகளுக்கு எதிராக அனைத்து நாடுகளும் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இருவரும் முடிவு செய்தோம்.
  மேலும், ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் விரைவில் சீர்திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும் என்பதை இருவரும் வலியுறுத்தினோம். ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக வேண்டும் என்ற இந்தியாவின் முயற்சிக்கு சைப்ரஸ் நாடு ஆதரவு தெரிவிக்கிறது. அதை இந்தியா வரவேற்கிறது.
  சைப்ரஸ் நாட்டின் இறையாண்மை, ஒருமைப்பாடு, ஒற்றுமை ஆகியவற்றை இந்தியா பெரிதும் மதிக்கிறது. அந்நாட்டின் முக்கியப் பிரச்னைகளில் இந்தியா எப்போதும் ஆதரவு அளித்து வருகிறது என்று பிரதமர் மோடி கூறினார். முன்னதாக, சைப்ரஸ் அதிபர் நிகோஸ் அனஸ்டாசியாட்ஸை வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் சந்தித்துப் பேசினார். அப்போது, இரு தரப்பு ஒத்துழைப்பு குறித்து இருவரும் விவாதித்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai