சுடச்சுட

  

  உ.பி. பெட்ரோல் விற்பனை நிலையங்களில் நூதன முறையில் மோசடி: 7 நிலையங்களுக்கு அதிகாரிகள் சீல்

  By DIN  |   Published on : 29th April 2017 12:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  உத்தரப் பிரதேசத்தில் பெட்ரோல் விற்பனை நிலையங்களில் பெட்ரோலை நிரப்பப் பயன்படுத்தப்படும் கருவியில் எலெக்ட்ரானிக் சிப்பை பொருத்தி நூதன முறையில் மோசடி செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுபோன்ற மோசடியில் ஈடுபட்ட 7 நிறுவனங்களுக்கு சீலிடப்பட்டுள்ளது.
  இதுகுறித்து உத்தரப் பிரதேச சிறப்பு அதிரடிப்படை துணை கண்காணிப்பாளர் அரவிந்த் சதுர்வேதி வெள்ளிக்கிழமை கூறியதாவது:
  மெக்கானிக் ஒருவரை கைது செய்து விசாரித்தபோது, உத்தரப் பிரதேசத்தின் பல்வேறு இடங்களில் இருக்கும் பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கு ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கப்படும் எலெக்ட்ரானிக் சிப்பை ரூ.3 ஆயிரத்துக்கு விற்றிருப்பது தெரிய வந்தது. இந்தக் கருவியை பெட்ரோல் நிரப்ப பயன்படுத்தப்படும் இயந்திரத்தில் பொருத்தியதும், அதிலிருந்து 1 லிட்டர் பெட்ரோல் வெளியே வருவதற்குப் பதிலாக, 960 மில்லியே வெளியே வரும். இதுபோன்ற மோசடியில் ஈடுபடும் நிறுவனங்கள், மாதத்துக்கு ரூ.14 லட்சம் வரையிலும் முறைகேடாக சம்பாதித்துள்ளதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
  இதனடிப்படையில், உத்தரப் பிரதேச சிறப்பு அதிரடிப்படை போலீஸார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அந்த சோதனையில் 7 பெட்ரோல் விற்பனை நிலையங்களில், மேற்கண்ட முறையில் மோசடி நடந்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, அந்த பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கு அதிகாரிகள் சீலிட்டனர். மேலும் 14 பேரைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  மேலும் பல இடங்களிலும் சோதனை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர் என்று அரவிந்த் சதுர்வேதி கூறினார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai