சுடச்சுட

  

  ஐஎஸ்ஐ உளவாளி என கூறிக்கொண்ட பாக். பயணி: தில்லி விமான நிலையத்தில் பரபரப்பு

  By DIN  |   Published on : 29th April 2017 02:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  'நான் ஓர் ஐஎஸ்ஐ உளவாளி; எனக்கும் அந்த அமைப்புக்கும் உள்ள தொடர்புகள் குறித்த விவரங்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்' என்று தில்லி விமான நிலைய அதிகாரிகளிடம் கூறிய பாகிஸ்தான் நாட்டுப் பயணியால் பரபரப்பு ஏற்பட்டது.
  இதுதொடர்பாக விமான நிலைய வட்டாரங்கள் கூறியதாவது: முகமது அகமது ஷேக் முகமது ரஃபீக் (38) என்ற அந்தப் பயணி, துபையில் இருந்து தில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்துக்கு வெள்ளிக்கிழமை வந்த விமானத்தில் வந்திறங்கினார்.
  பின்னர், நேபாளத் தலைநகர் காத்மாண்டுக்கு செல்ல திட்டமிட்டிருந்த அவர், அந்த விமானத்தில் பயணிக்காமல், நேராக விமான நிலைய உதவி மையத்துக்கு வந்தார்.
  அங்கிருந்த ஊழியர்களிடம், 'வணக்கம். நான் ஓர் ஐஎஸ்ஐ (பாகிஸ்தானின் உளவு அமைப்பு) உளவாளி. எனக்கும் அந்த அமைப்புக்கும் உள்ள தொடர்புகள் குறித்த விவரங்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்' என்றார்.
  மேலும், அந்த அமைப்புடனான தொடர்புகளை துண்டித்துவிட்டு, இந்தியாவிலேயே தங்கியிருக்க விரும்புவதாகவும் அவர் கூறினார்.
  இதனால், அதிர்ச்சியடைந்த ஊழியர்கள், உடனடியாக விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, ரஃபீக்கை சுற்றிவளைத்த பாதுகாப்பு அதிகாரிகள், மத்திய உளவு அமைப்பினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விமான நிலையத்துக்கு வந்த மத்திய உளவு அமைப்பினர், அவரை தங்களது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டனர். ரஃபீக்கிடம் பாகிஸ்தான் நாட்டு பாஸ்போர்ட் உள்ளது. அவர் கூறிய விஷயங்கள் உண்மைதானா என்பதை கண்டறிவதற்காக, அவரை ரகசிய இடத்தில் வைத்து, உளவு அமைப்பினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்று விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai