சுடச்சுட

  

  கேரள அமைச்சர் மணியை பதவி நீக்கம் செய்ய கோரிக்கை: மார்க்சிஸ்ட் நிராகரிப்பு

  By DIN  |   Published on : 29th April 2017 12:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தேயிலைத் தோட்டப் பெண் தொழிலாளர்கள் அமைப்பினருக்கு எதிராக கேரள மின் துறை அமைச்சர் எம்.எம்.மணி சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாகக் கூறி அவரை பதவி நீக்கம் செய்யுமாறு எதிர்க்கட்சிகள் விடுத்துவரும் கோரிக்கையை ஆளும் இடது ஜனநாயக முன்னணி (யுடிஎஃப்) கூட்டணியில் அங்கம் வகிக்கும் முதன்மைக் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிராகரித்தது.
  அந்த மாநிலத் தலைநகர் திருவனந்தபுரத்தில் கடந்த 2 நாட்களாக நடைபெற்றுவந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமையுடன் முடிவடைந்தது. பின்னர் செய்தியாளர்களிடம் அக்கட்சியின் மாநிலச் செயலர் கொடியேறி பாலகிருஷ்ணன் கூறியதாவது:
  எந்தவொரு பிரச்னை என்றாலும் சம்பந்தப்பட்டவர்களை பதவிநீக்கம் செய்யுமாறு எதிர்க்கட்சியினர் கோஷமிடுவதும், கோரிக்கை முன்வைப்பதும் வழக்கமான ஒன்று. அவர்களின் கோரிக்கைகளுக்கு எங்களால் செவிசாய்க்க முடியாது. அமைச்சர் மணியை பதவிநீக்கம் செய்ய வேண்டிய தேவை இருப்பதாகத் தெரியவில்லை.
  அவரது கருத்துக்கு கட்சி சார்பில் வெளிப்படையாக கண்டனம் தெரிவிக்கப்பட்டு விட்டது. இது கட்சியில் உள்ள மற்றவர்களுக்கும் ஒரு பாடமாக இருக்கும். கட்சியின் பெயருக்கு அவரது பேச்சு களங்கத்தை விளைவித்த காரணத்தால் அவருக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது என்று கொடியேறி பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
  அமைச்சர் எம்.எம்.மணி (70) இடுக்கி மாவட்ட தேயிலை தோட்டப் பெண் தொழிலாளர்கள் அமைப்பினர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கக் கோரி தோட்டப் பெண் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சியினரும் அவர்களின் கோரிக்கைக்கு ஆதரவு அளித்து வருகின்றனர்.
  இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பான வழக்கை விசாரித்து வரும் கேரள உயர் நீதிமன்றம், தேயிலைத் தோட்ட பெண் தொழிலாளர்களுக்கு எதிராக அமைச்சர் எம்.எம்.மணி தெரிவித்த கருத்து தீவிரமாக அணுகப்படவேண்டும் என்று விமர்சித்தது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai