சுடச்சுட

  

  சிஆர்பிஎஃப் வீரர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட பகுதியில் நக்ஸல் உடல் கண்டெடுப்பு

  By DIN  |   Published on : 29th April 2017 09:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் 25 சிஆர்பிஎஃப் வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட பகுதியில் நக்ஸல் தீவிரவாதி ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

  சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் உள்ள புர்க்கபல் பகுதியில் சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது நக்ஸல்கள் கடந்த திங்கள்கிழமை துப்பாக்கியால் கண்முடித்தனமாகச் சுட்டு, தாக்குதல் நடத்தினர். அப்போது வீரர்கள் உணவருந்திக் கொண்டிருந்ததால் உடனடியாக திருப்பிச் சுட முடியவில்லை. இதனால், அந்தத் தாக்குதலில்  25 வீரர்கள் கொல்லப்பட்டனர்.

  எனினும், தகவலறிந்து அருகில் உள்ள பகுதியில் இருந்து விரைந்து வந்த மற்ற சிஆர்பிஎஃப் வீரர்கள் நக்ஸல்கள் மீது துப்பாக்கியால் சுட்டனர். இரு தரப்புக்கும் இடையே சிறிது நேரம் துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து நக்ஸல்கள் வனப் பகுதிக்குள் தப்பியோடி விட்டனர்.

  இந்தச் சம்பவத்துக்குப் பிறகு சம்பந்தப்பட்ட பகுதியில் தீவிரவாதிகளின் நடமாட்டம் காணப்படுவதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, புர்க்கபல் பகுதியிலும் அதன் அருகில் உள்ள வனப்பகுதியிலும் சிஆர்பிஎஃப் வீரர்கள் வியாழக்கிழமை இரவு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது நக்ஸலைட் ஒருவரின் சடலத்தை அவர்கள் கண்டெடுத்தனர்.

  அந்தத் தீவிரவாதி, கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் இறந்தவர் ஆவார். எனினும், அவரது அடையாளம் இன்னும் தெரிய வரவில்லை. மேற்கண்ட மோதலைத் தொடர்ந்து மேலும் சில தீவிரவாதிகள் இறந்ததாகவும் தகவல்கள் வந்தன. எனினும், அவர்களின் உடல்களை மற்ற நக்ஸலைட்டுகள் காட்டுக்குள் இழுத்துச் சென்று விட்டதாகத் தெரிகிறது என்று நக்ஸலைட் எதிர்ப்பு சிறப்பு காவல்துறை டிஜிபியான டி.எம்.அவஸ்தி தெரிவித்தார்.

  கடந்த திங்கள்கிழமை நிகழ்த்தப்பட்ட தாக்குதலில் தொடர்புடைய நக்ஸலைட்டுகளைக் கண்டறிவதற்காக அப்பகுதியில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது என்றார் அவஸ்தி.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai