சுடச்சுட

  

  ஜிஎஸ்டியால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும்: ஐ.எம்.எஃப். நம்பிக்கை

  By DIN  |   Published on : 29th April 2017 12:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  இந்தியாவில் வரும் ஜூலை மாதம் முதல் அமல்படுத்தப்படவுள்ள சரக்கு-சேவை வரி விதிப்புச் சட்டத்தால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி கணிசமாக அதிகரிக்கும் என்று பன்னாட்டு நிதியம் (ஐ.எம்.எஃப்.) நம்பிக்கை தெரிவித்துள்ளது.
  அதேசமயத்தில், இந்திய வங்கித்துறையில் புரையோடிக் கிடக்கும் வாராக் கடன் பிரச்னை, இந்தப் பொருளதார வளர்ச்சிக்கு பெரும் சவாலாக இருக்கும் எனவும் அது கணித்துள்ளது.
  இதுகுறித்து பன்னாட்டு நிதியத்தின் துணைத் தலைவர் டா ஜங்க், வாஷிங்டனில் பிடிஐ செய்தியாளரிடம் கூறியதாவது:
  ஆசியப் பிராந்தியத்தில் மிக வேகமாக வளரும் சந்தைப் பொருளதார சக்தியாக இந்தியா உருவெடுத்துள்ளது.
  2016-17-ஆம் நிதியாண்டில் 6.8 சதவீதம் இருந்த இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் நிகழ் நிதியாண்டில் (2017-18) 7.2 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதற்கு, இந்தியா மேற்கொண்டு வரும் பொருளாதாரச் சீர்திருத்த நடவடிக்கைகளே முக்கியக் காரணமாகும்.
  இந்நிலையில், ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையும் அமலாகும்பட்சத்தில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 8 சதவீதத்துக்கும் மேலாக அதிகரிக்கும். மேலும், ஜிஎஸ்டி முறையால் நாடு முழுவதும் சரக்குகள் மற்றும் சேவைகளின் இயக்கமும், அதன் உற்பத்தியும் விரிவுபடுத்தப்படும்.
  சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள கச்சா எண்ணெயின் விலை சரிவும், இந்தியாவின் பொருளாதார செயல்திறனை அதிகரித்துள்ளது. அதேபோல், இந்திய அரசின் ஆக்கப்பூர்வமான நிதிக் கொள்கைகளும் பொருளாதார ஸ்திரத்தன்மையை நீடிக்க உதவுகின்றன.
  ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை: இந்திய அரசின் ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையானது நாட்டின் பொருளாதார வளர்ச்சியை சற்று பாதித்துள்ளது.
  அதேநேரத்தில், தற்போது இந்த பாதிப்பிலிருந்து இந்தியப் பொருளாதாரம் மீண்டு வருவதைப் பார்க்கும்போது, அந்த நடவடிக்கை சரியான பாதையை நோக்கி சென்றுக் கொண்டிருப்பதை உணர்த்துகிறது.
  வாராக் கடன் விவகாரம்: இந்திய அரசின் புதிய நிதிக் கொள்கைகளால் வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கும் பொருளாதரத்துக்கு அந்நாட்டு வங்கிகளில் உள்ள வாராக் கடன் பிரச்னை பெரும் தடையாக உருவெடுத்திருக்கிறது.
  இந்தியா - சீனா இடையே சுமுக உறவு அவசியம்: இந்தியா - சீனா நாடுகளின் பொருளாதாரமே உலகப் பொருளாதாரத்தின் சரிபாதியை வியாபித்திருக்கின்றன.
  எனவே, உலகப் பொருளாதாரம் ஸ்திரத்தன்மையுடன் இருக்க வேண்டுமென்றால், இந்த இரு நாடுகள் இடையேயான உறவு சுமுகமாக இருக்க வேண்டியது அவசியம் என்றார் டா ஜங்க்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai