சுடச்சுட

  

  நாரதா ரகசிய விடியோ விவகாரம்: திரிணமூல் காங்கிரஸ் தலைவர்கள் மீது அமலாக்கத் துறை வழக்கு

  By DIN  |   Published on : 29th April 2017 12:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நாரதா ரகசிய விடியோ விவகாரத்தில் சிக்கியுள்ள திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள், எம்.பி.க்கள் உள்ளிட்டோர் மீது கருப்புப் பண தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
  இதுதொடர்பாக, அந்தத் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
  நாரதா ரகசிய விடியோ விவகாரத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் மீது சிபிஐ தாக்கல் செய்துள்ள முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில், அவர்கள் மீது கருப்புப் பண தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளோம்.
  இந்த வழக்கில் குற்றம் நடைபெற்றதன் பின்னணி குறித்து விரைவில் விசாரிக்க உள்ளோம். விசாரணைக்கு ஆஜராவது தொடர்பாக, சம்பந்தப்பட்டவர்களுக்கு சம்மன்களை அனுப்ப உள்ளோம் என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
  திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள், எம்.பி.க்கள் உள்ளிட்ட 13 பேர் லஞ்சம் வாங்குவது போன்ற காட்சிகள் அடங்கிய ரகசிய விடியோ பதிவை நாரதா இணையதளம் கடந்த ஆண்டு வெளியிட்டது. இதுதொடர்பாக, சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளது.
  இந்த வழக்கில் மாநிலங்களவை எம்.பி. முகுல் ராய், மக்களவை எம்.பி.க்கள் சௌகதா ராய், அபரூபா போதார் உள்ளிட்ட 6 எம்.பி.க்கள், மேற்கு வங்க அமைச்சர்கள் ஃபிர்ஹத் ஹக்கீம், சுவேந்து அதிகாரி உள்ளிட்ட 4 பேர், முன்னாள் அமைச்சர் மதன் மித்ரா, எம்எல்ஏ இக்பால் அகமது என திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 12 பேர் மீதும், காவல் துறை அதிகாரி சையது முஸ்தஃபா ஹுசைன் என்பவர் மீதும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதனிடையே, நாரதா ரகசிய விடியோ விவகாரம் குறித்து சிபிஐ தனது விசாரணையை தொடர வேண்டும் என்று கொல்கத்தா உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai