சுடச்சுட

  

  நில ஒப்பந்தம் மூலம் வதேராவுக்கு ரூ.50 கோடி சட்டவிரோத லாபம்: திங்க்ரா குழு அறிக்கையில் தகவல்

  By DIN  |   Published on : 29th April 2017 01:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  robert_vadora

  ஹரியாணாவில் கடந்த 2008-ஆம் ஆண்டில் செய்து கொண்ட நில ஒப்பந்தம் மூலம் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா சட்டவிரோதமாக ரூ.50 கோடி லாபம் ஈட்டியதாக இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த அமைக்கப்பட்ட திங்க்ரா குழுவின் அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
  ஹரியாணாவில் முந்தைய காங்கிரஸ் அரசு ஆட்சியின்போது, குர்கானில் ராபர்ட் வதேராவின் ஸ்கைலைட் ஹாஸ்பிடாலிட்டி நிறுவனத்துக்கு நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.
  இந்நிலையில், ஹரியாணாவில் மனோகர் லால் கட்டார் தலைமையில் அமைந்த பாஜக அரசு, இந்தக் குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி திங்க்ரா தலைமையில் கடந்த 2015-ஆம் ஆண்டில் குழுவை அமைத்தது. அந்தக் குழு மனோகர் லால் கட்டாரிடம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 182 பக்க அறிக்கையை தாக்கல் செய்தது. உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்காரணமாக, இந்த அறிக்கை விவரத்தை ஹரியாணா அரசு இதுவரையிலும் வெளியிடவில்லை.
  இந்நிலையில், பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றில், திங்க்ரா குழுவின் அறிக்கையில் நில ஒப்பந்தம் மூலம் ஒரு பைசா கூட முதலீடு செய்யாமல், ரூ.50 கோடிக்கும் அதிகமாக ராபர்ட் வதேரா சட்டவிரோதமாக லாபம் ஈட்டியுள்ளார் என குற்றம்சாட்டப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
  வதேராவின் ஸ்கைலைட் ஹாஸ்பிடாலிட்டி நிறுவனத்துக்கும், ஓங்காரேஸ்வர் நிறுவனத்துக்கும் இடையேயான பரிவர்த்தனைகள், ஸ்கைலைட் மற்றும் டிஎல்எஃப் நிறுவனம் இடையேயான பரிவர்த்தனைகள் குறித்து திங்க்ரா குழு விசாரணை நடத்தியது. ராபர்ட் வதேரா மற்றும் அவரது நிறுவனங்களால் வாங்கப்பட்ட 20 சொத்துகள் குறித்தும் அக்குழு விசாரணை நடத்தியது.
  ஓங்காரேஸ்வர் நிறுவனத்திடம் இருந்து ராபர்ட் வதேரா நிறுவனத்தால் நிலம் வாங்கப்பட்டிருப்பதாகவும் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வதேரா, அவரது நிறுவனங்களால் வாங்கப்பட்ட சொத்துகள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் திங்க்ரா குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது என்று அந்தப் பத்திரிகைச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  இதுகுறித்து மனோகர் லால் கட்டார் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியபோது, திங்க்ரா குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கும் தகவல்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அதேநேரத்தில், திங்க்ரா குழுவின் அறிக்கை விவரம் அரசால் வேண்டுமென்றே கசியவிடப்பட்டிருப்பதாக காங்கிரஸ் தெரிவித்துள்ள குற்றச்சாட்டை கட்டார் மறுத்தார்.
  சண்டீகரில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான வெங்கய்ய நாயுடுவும், திங்க்ரா குழு அறிக்கை கசியவிடப்பட்டதாக காங்கிரஸ் தெரிவித்த குற்றச்சாட்டை மறுத்தார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், 'கசிய விடும் வழக்கம் பாஜக அரசுக்கு இல்லை; வெளிப்படைத்தன்மை மீதும், சட்ட விவகாரத்தில் தலையீடு செய்யக் கூடாது என்பதிலும் அரசு நம்பிக்கை கொண்டுள்ளது. அதேபோல், தனிப்பட்ட நபர்களின் பின்னர் அரசு செல்லாது' என்றார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai