சுடச்சுட

    

    மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு: ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் புரோஹித் மேல்முறையீடு

    By DIN  |   Published on : 29th April 2017 12:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    purohit

    மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் தமக்கு ஜாமீன் வழங்கக் கோரி முன்னாள் ராணுவ அதிகாரி ஸ்ரீகாந்த் புரோஹித் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
    மகாராஷ்டிர மாநிலம், நாசிக் மாவட்டத்தில் உள்ள மாலேகான் நகரில் கடந்த 2008-ஆம் ஆண்டு நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 3 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
    இந்த குண்டுவெடிப்புச் சம்பவத்துக்கு சதித் திட்டம் தீட்டியதாக பெண் துறவி சாத்வி பிரக்யா மற்றும் முன்னாள் ராணுவ அதிகாரி ஸ்ரீகாந்த் புரோஹித் ஆகியோரை பயங்கரவாத தடுப்புப் படையினர் (ஏடிஎஸ்) கைது செய்தனர்.
    பின்னர், இந்த வழக்கு தேசியப் புலனாய்வு அமைப்புக்கு (என்.ஐ.ஏ.) மாற்றப்பட்டது.
    இந்நிலையில், இந்த வழக்கில் ஜாமீன் வழங்கக் கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் சாத்வி பிரக்ஞா, புரோஹித் ஆகியோர் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை கடந்த 25-ஆம் தேதி விசாரித்த நீதிமன்றம், சாத்வி பிரக்ஞாவுக்கு மட்டும் ஜாமீன் வழங்கியது.
    புரோஹித்துக்கு எதிரான குற்றச்சாட்டுகளின் தீவிரத் தன்மையைக் கருதி அவருக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.
    இந்தச் சூழலில், மும்பை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் புரோஹித் சார்பில் ஜாமீன் கோரி வெள்ளிக்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது. மேலும், இந்த மனுவை அவசர வழக்காகக் கருதி விசாரிக்கக் கோரியும் புஹோஹித் சார்பில் கோரப்பட்டிருந்தது.
    இந்த மனுவானது, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹர் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, புரோஹித்தின் ஜாமீன் மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொள்வதாக நீதிபதிகள் தெரிவித்தனர். எனினும், இதனை அவசர வழக்காக எடுத்துக் கொள்ள நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.
    சாத்வி மனு - என்ஐஏ-வுக்கு நோட்டீஸ்: இதனிடையே, மாலேகான் குண்டுவெடிப்பில் பலியான ஒரு நபரின் தந்தையை இந்த வழக்கு விசாரணையில் வாதி தரப்பினருக்கு உதவுவதற்கு என்ஐஏ நீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் அனுமதி அளித்தது. இதனை எதிர்த்து சாத்வி பிரக்ஞா தாக்கல் செய்த மனுவை மும்பை உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை விசாரித்தது. பின்னர், இந்த மனுவுக்கு பதிலளிக்குமாறு என்ஐஏ அமைப்புக்கு நீதிபதிகள் நோட்டீஸ் அனுப்பினர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai