சுடச்சுட

  

  யோகி ஆதித்யநாத் போல முடிதிருத்தம்: மாணவர்களுக்கு உ.பி. பள்ளி பிறப்பித்த உத்தரவால் சர்ச்சை

  By DIN  |   Published on : 29th April 2017 02:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  உத்தரப் பிரதேச மாநிலம், மீரட் பகுதியில் அமைந்துள்ள பள்ளியொன்றில் அந்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தைப் போல முடிதிருத்தம் செய்து வருமாறு மாணவர்களுக்கு உத்தரவு பிறப்பித்தது சர்ச்சைகளை எழுப்பியுள்ளது. மேலும், பள்ளிக்குள் அசைவ உணவுகள் எடுத்துவரத் தடை விதிக்கப்பட்டதும் விமர்சனங்களுக்கு வித்திட்டுள்ளது.
  இந்த அறிவுறுத்தல்களை எதிர்த்து மாணவர்களின் பெற்றோர் போராட்டம் நடத்தியபோதிலும், தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள பள்ளி நிர்வாகம் திட்டவட்டமாக மறுத்துவிட்டது. மேலும், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அப்பள்ளி எச்சரித்துள்ளது.
  மீரட் பகுதியில் அமைந்துள்ள சிபிஎஸ்இ பள்ளியொன்றின் மேலாளர், அங்கு பயிலும் மாணவர்களுக்கு அண்மையில் சில அறிவுறுத்தல்களை வழங்கியதாகத் தெரிகிறது. அதாவது, மாணவர்கள் அனைவரும் யோகி ஆதித்யநாத் போன்று முடிதிருத்தம் செய்து கொள்ள வேண்டும் என்றும் அசைவ உணவுகளை பள்ளி வளாகத்துக்குள் சாப்பிடக் கூடாது என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
  இதனை எதிர்த்து மாணவர்களின் பெற்றோர் சிலர் வியாழக்கிழமை போராட்டம் நடத்தினர். இதுதொடர்பாக கருத்து தெரிவித்த பள்ளி நிர்வாகம், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறையில் புகாரளிக்கப்படும் என்று கூறியுள்ளது. மேலும், தங்களது உத்தரவைத் திரும்பப் பெறப்போவதில்லை என்றும் தெரிவித்துள்ளது. இது அந்த மாநில கல்வித் துறை வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு மாவட்ட கல்வித் துறை, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai