சுடச்சுட

    

    லஞ்ச வழக்கு: ஜெகன்மோகனின் ஜாமீனை ரத்து செய்ய நீதிமன்றம் மறுப்பு

    By DIN  |   Published on : 29th April 2017 12:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    jaganmohan

     

    லஞ்ச வழக்கில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்வதற்கு ஹைதராபாத் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் மறுத்து விட்டது.
    ஆந்திரப் பிரதேச முதல்வராக ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி கடந்த 2004 முதல் 2009-ஆம் ஆண்டு வரை பதவி வகித்தார். அந்தக் காலகட்டத்தில் பல்வேறு நிறுவனங்களுக்கு சட்டத்தை மீறி சலுகைகள் காட்டப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. உரிமங்கள், நில ஒதுக்கீடுகள் ஆகியவை அவற்றில் அடங்கும்.
    இந்தச் சலுகைகளுக்குப் பிரதிபலனாக (லஞ்சமாக), ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன்மோகனுக்குச் சொந்தமான நிறுவனங்களில் மேற்கண்ட நிறுவனங்கள் பெருமளவில் பணத்தை முதலீடு செய்ததாக சிபிஐ கடந்த 2011-இல் வழக்குப்பதிவு செய்தது.
    இவ்விதம் தன் தந்தையின் பதவியை முறைகேடாகப் பயன்படுத்தி ஜெகன்மோகன் பெருமளவில் சொத்துகளைக் குவித்ததாக சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் சில முன்னாள் அமைச்சர்கள், அதிகாரிகள் ஆகியோரின் பெயர்களும் குற்றம்சாட்டப்பட்டவர்களாக இடம்பெற்றுள்ளன.
    இந்த வழக்கில் ஜெகன்மோகன் கடந்த 2012 மே மாதம் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, ஹைதராபாத் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் 15 மாத சிறைவாசத்துக்குப் பிறகு கடந்த 2013 செப்டம்பர் மாதம் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அப்போது, சாட்சிகளைக் கலைக்கக் கூடாது என்றும் ஹைதராபாத் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வரும்போதெல்லாம் ஆஜராக வேண்டும் என்று நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.
    இதனிடையே, சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ கடந்த மாதம் ஒரு மனுவைத் தாக்கல் செய்தது. அதில், 'இந்த வழக்கில் முக்கிய சாட்சியான ஆந்திர முன்னாள் தலைமைச் செயலாளர் பி.ரமாகாந்த் ரெட்டியை பிறழ்சாட்சியாக்க ஜெகன்மோகன் ரெட்டி முயற்சி மேற்கொண்டுள்ளார். இதன் மூலம் ஜாமீன் நிபந்தனைகளை அவர் மீறி விட்டார். எனவே அவரது ஜாமீனை ரத்து செய்ய வேண்டும்' என்று சிபிஐ கோரியிருந்தது. இந்த மனுவை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், இருதரப்பு வாதங்களைக் கேட்ட பின் தீர்ப்பை ஒத்திவைத்தது.
    இந்நிலையில், ஜெகனுக்கு அளிக்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கோரும் சிபிஐ-யின் மனுவை சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai