சுடச்சுட

  

  'அமைச்சர் பதவியைப் பெற லாலுவின் மகனுக்கு நிலம் கொடுத்தார் காந்தி சிங்'

  By DIN  |   Published on : 30th April 2017 12:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் அமைச்சர் பதவியை பெறுவதற்காக, ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைவர் லாலு பிரசாத்தின் மகன்களுக்கு முன்னாள் மத்திய அமைச்சர் காந்தி சிங் தனது மதிப்புமிக்க நிலத்தை லஞ்சமாகக் கொடுத்தார் என்று பாஜக குற்றம்சாட்டியுள்ளது.
  மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான முந்தைய அரசில் அமைச்சராக பதவி வகித்தவர் காந்தி சிங். காங்கிரஸ் கூட்டணி கட்சியான ராஷ்ட்ரீய ஜனதா தளத்தைச் சேர்ந்தவரான இவர் மீது
  பாஜக தற்போது பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
  இதுதொடர்பாக, பிகார் மாநில பாஜக மூத்த தலைவர் சுஷில் குமார் மோடி, பாட்னாவில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:
  மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசின் முதலாம் ஆட்சிக் காலத்தில் (2004-2009) அமைச்சர் பதவியை பெறுவதற்காக, ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத் யாதவின் மகன்கள் தேஜஸ்வி, தேஜ் பிரதாப் ஆகியோருக்கு பாட்னாவிலுள்ள தனது மதிப்புமிக்க நிலத்தையும், அதிலிருந்த மூன்று மாடிக் கட்டடத்தையும் கடந்த 2005-ஆம் ஆண்டில் 'அன்பளிப்பாக' கொடுத்தார் காந்தி சிங்.
  தேஜஸ்வியும், தேஜ் பிரதாப்பும் சொந்த மகன்கள் போல தனக்கு உதவியதால் அந்த நிலத்தை அவர்களுக்கு கொடுத்ததாக காந்தி சிங் கூறியுள்ளார். அந்தக் கால கட்டத்தில் இருவரும் 15, 16 வயதுடையவர்கள். அந்த வயதில், என்ன உதவிகள் செய்திருக்க முடியும்? அப்படியென்றால், காந்தி சிங்கின் சொந்த மகனான ரிஷி குமார் பயனற்றுப் போய்விட்டாரா? என்று கேள்வியெழுப்பினார் சுஷில் குமார் மோடி.
  இதனிடையே, சுஷில் குமாரை விமர்சித்து, ஆர்ஜேடி முன்னாள் எம்.பி. சிவானந்த் திவாரி கூறியதாவது: கடந்த 2008-ஆம் ஆண்டில் ஆதாரப்பூர்வமாக நான் எழுப்பிய குற்றச்சாட்டுகளை இப்போது மீண்டும் தூசி தட்டி எடுத்துவந்துள்ளார் சுஷில் குமார். தினமும் ஒரு குற்றச்சாட்டுகளை முன்வைப்பதற்கு பதிலாக, பிரதமர் அலுவலகத்தை அணுகி இதுதொடர்பான விசாரணைக்கு நடவடிக்கை மேற்கொள்ளுங்கள்' என்றார் திவாரி.
  ஆர்ஜேடி கட்சியில் இருந்து நீக்கப்பட்டவரான சிவானந்த் திவாரி, பின்னர் ஐக்கிய ஜனதா தளத்தில் இணைந்தார். அதன்பிறகு அக்கட்சியில் இருந்தும் அவர் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai