சுடச்சுட

  

  அலாகாபாத் பல்கலை.யில் வன்முறை: 22 பேர் கைது, 2,000 பேர் மீது வழக்கு

  By DIN  |   Published on : 30th April 2017 02:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அலாகாபாத் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற வன்முறை தொடர்பாக இதுவரை 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சுமார் 2,000 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
  இதுதொடர்பாக, காவல்துறை துணை கண்காணிப்பாளர் விஜய் சங்கர் திவாரி சனிக்கிழமை கூறியதாவது:
  அலாகாபாத் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் நிதி முறைகேடுகளைக் குறித்து விசாரிக்கக் கோரி மாணவர்கள் உள்ளிட்டோர் பல்கலைக்கழகத்திலுள்ள விருந்தினர் மாளிகை முன் வெள்ளிக்கிழமை கூடினர்.
  பல்கலைக்கழகத்தின் விடுதிகளில் சட்டவிரோதமாக தங்கியுள்ளவர்களை வெளியேற்றுவது தொடர்பாக அங்கு பிரச்னை நிலவும் சூழலில், மாணவர்கள் உள்பட யாரும் அங்கு கும்பலாகக் கூடக் கூடாது என்று ஏற்கெனவே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
  இந்நிலையில், பல மாணவர்கள் வெள்ளிக்கிழமை அங்கு கூடி முழக்கங்களை எழுப்பினர். இதையடுத்து, போலீஸார் அங்கு சென்று மாணவர்களைக் கட்டுப்படுத்த முயன்றனர்.
  இதில் போலீஸாருக்கும், மாணவர்களுக்கும் இடையே வன்முறை வெடித்தது. இதனால், அந்தப் பகுதியே கலவர பூமியாக மாறியது.
  வன்முறையின்போது பேருந்துக்கு தீ வைத்தது, வாகனங்களை சேதப்படுத்தியது, கல்வீச்சில் ஈடுபட்டது தொடர்பாக இதுவரை 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார் அவர்.
  அறிக்கை கோரினார் முதல்வர்: இதனிடையே, அலாகாபாத் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற கலவரம் தொடர்பாக விரிவான அறிக்கையை தாக்கல் செய்யுமாறு உத்தரப் பிரதேச அரசின் தலைமைச் செயலருக்கும், காவல் துறை தலைவருக்கும் முதல்வர் யோகி ஆதித்யநாத் சனிக்கிழமை உத்தரவிட்டார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai