சுடச்சுட

  

  இஸ்லாமிய அடிப்படைவாத ஆதரவாளர்களே காஷ்மீரில் கல்வீச்சு நடத்துகின்றனர்: காஷ்மீர் பண்டிட்டுகள் அமைப்பு

  By DIN  |   Published on : 30th April 2017 12:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் மீது கல்வீச்சு நடத்துவோர் அனைவரும் மிகப்பெரிய இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கத்தின் ஒரு பகுதிதான் என்று காஷ்மீர் பண்டிட்டுகள் அமைப்பு குறைகூறியுள்ளது.
  காஷ்மீரில் இருந்து 1990-ஆம் ஆண்டுகளில் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட பண்டிட் சமூகத்தினர் நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் அகதிகள் போல் வாழ்ந்து வருகின்றனர். அவ்வாறு குஜராத் மாநிலத்தில் வசித்து வரும் பண்டிட்டுகளைச் சந்திக்க 'பனூன் காஷ்மீர்' என்ற காஷ்மீர் பண்டிட்டுகள் அமைப்பின் தலைவர் அஸ்வனி சுருங்கூ, ஆமதாபாத் வந்துள்ளார். அந்த நகர மேயர் கௌதம் ஷாவைச் சந்தித்து பண்டிட்டுகளின் பிரச்னை குறித்து விவாதிக்கவும் திட்டமிட்டுள்ள அவர், செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:
  காஷ்மீரில் கல்வீச்சு நடைபெறுவது என்பது புதிதல்ல. அது கடந்த 1931-ஆம் ஆண்டில் இருந்தே காஷ்மீர் அரசியலில் ஒரு பகுதியாக இருந்து வந்துள்ளது. ஆனால், தற்போது அங்கு கல்வீச்சில் ஈடுபடுபவர்கள் அனைவரும் மிகப்பெரிய இஸ்லாமிய அடிப்படைவாதம் மற்றும் உலகளாவிய பயங்கரவாதத்தின் ஒரு பகுதியாக உள்ளனர். தற்போது காஷ்மீரில் பயங்கரவாதத்துக்கு ஒரு கவசம் போல் கல்வீச்சு நடைமுறை பின்பற்றப்படுகிறது.
  கல்வீச்சு கலாசாரத்தின் முதல் இலக்காக பாதிக்கப்பட்டது பண்டிட் சமூகத்தினர்தான். காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருந்து பண்டிட்டுகள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட பிறகு, அரசியல் எதிரிகளுடன் மோதுவதற்கு கல்வீச்சு பயன்படுத்தப்பட்டது.
  காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள முக்கிய அரசியல் தலைவர்களும் கல்வீச்சை ஆதரிப்பது கண்டனத்துக்குரியது. அவர்கள் இந்தப் பிரச்னையை தங்கள் அரசியல் ஆதாயத்துக்குப் பயன்படுத்துகின்றனர்.
  எனவே, இந்த விவகாரத்தில் மத்திய அரசு கடுமையான நிலைப்பாட்டை எடுத்து, கல்வீச்சில் ஈடுபடுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கிறோம். அடிப்படைவாதிகளைச் சமாளிப்பதற்கு தேசியவாத சக்திகள் வலுப்படுத்தப்பட வேண்டும். மேலும், காஷ்மீர் பள்ளத்தாக்கில் பண்டிட் சமூகத்தினர் மற்றும் சிறுபான்மை இனத்தவருக்காக தனி யூனியன் பிரதேசத்தையும் உருவாக்குமாறு எங்கள் சமூகம் கோருகிறது என்றார் அவர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai