சுடச்சுட

  
  SWAMI-PRASADMAURYA

  உத்தரப் பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியின் அரசியல் வாழ்வை முடிவுக்கு கொண்டு வந்து விட்டதாக மாநில அமைச்சர் சுவாமி பிரசாத் மெளரியா கூறினார்.
  உத்தரப் பிரதேச சட்டப் பேரவையின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த சுவாமி பிரசாத் மெளரியா, பகுஜன் சமாஜ் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் கடந்த ஆண்டு ஜூன் மாதம், வெளியேறி பாஜகவில் இணைந்தார். பகுஜன் சமாஜ் கட்சியில் பணம் கொடுப்பவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுப்பதாக அவர் குற்றம் சாட்டியிருந்தார்.
  தற்போது முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் அமைச்சரவையில் தொழிலாளர் நலன் மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்புத் துறை அமைச்சராக இருக்கும் அவர், உத்தரப் பிரதேச மாநிலம், பஸ்தியில் செய்தியாளர்களுக்கு சனிக்கிழமை பேட்டியளித்தார். அவர் கூறியதாவது: பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து நான் வெளியேறியபோது, கட்சியை விட்டு வெளியேறுபவர்கள் அழிந்துவிடுவார்கள் என்று மாயாவதி கூறினார். ஆனால், அவருக்கு அரசியல் கற்றுத் தருவதாக நான் சபதம் செய்தேன். அதன்படி, மாயாவதியின் அரசியல் வாழ்வை முடிவுக்கு கொண்டு வந்து சபதத்தை நிறைவேற்றி விட்டேன். அவரால் தற்போது மக்களவை அல்லது மாநிலங்களவை உறுப்பினராகக் கூட ஆக முடியாது.
  அண்மையில் நடைபெற்ற தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தோல்வி அடைந்ததால் மாயாவதி விரக்தியில் இருக்கிறார். எனவே, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக அவர் குறை கூறுகிறார் என்றார் சுவாமி பிரசாத் மெளரியா.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai