சுடச்சுட

    

    ஏழைகளுக்கு உரிய நேரத்தில் சட்ட உதவி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல்

    By DIN  |   Published on : 30th April 2017 01:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    JSKHEHAR

    'நாட்டில் ஏழைகளுக்கும் கல்வியறிவில்லாதோருக்கும் உரிய நேரத்தில் சட்ட உதவிகள் கிடைக்காமல் இருப்பது, நீதித்துறை மீதான நம்பகத்தன்மையை பாதிக்கச் செய்கிறது' என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தெரிவித்தார்.
    தில்லியில் சட்ட உதவி தன்னார்வலர்களின் 2 நாள் தேசிய மாநாடு சனிக்கிழமை தொடங்கியது. இந்த மாநாட்டைத் தொடங்கி வைத்து, ஜே.எஸ்.கேஹர் பேசியதாவது: நாட்டில் ஏழைகளுக்கும், கல்வியறிவில்லாதோருக்கும் உரிய நேரத்தில் சட்ட உதவிகள் கிடைக்காமல் இருப்பது, நீதித்துறை மற்றும் சட்டத்தின் மீதான நம்பகத் தன்மையை வெகுவாக பாதிக்கிறது.
    ஏழைகளுக்கு இழைக்கப்படும் அநீதியை தடுத்து, அவர்களுக்கு நீதித் துறையின் பயன்களை கொண்டு சேர்ப்பதில் சட்ட உதவி தன்னார்வலர்களின் பணி முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஏழைகளுக்கும், சாதாரண மக்களுக்கும் அவர்கள் செய்யும் சேவை, தெய்வீகப் பணியாகும். சட்டங்கள் குறித்தும், நீதித் துறை நடைமுறை குறித்தும் அடிப்படை பயிற்சியை பெற்றிருக்கும் சட்ட உதவி தன்னார்வலர்கள், ஏழை மக்களின் பணத்தையும், நேரத்தையும் மட்டுமன்றி, நீதிமன்றங்களின் நேரத்தையும் மிச்சப்படுத்துகின்றனர் என்றார் ஜே.எஸ்.கேஹர்.
    நீதித் துறையில் தொழில்நுட்பங்கள்: இந்த மாநாட்டில், மத்திய சட்டம் மற்றும் நீதித் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பேசியதாவது:
    நீதித் துறை நடைமுறையில், தொழில்நுட்பங்களின் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டிய அவசியம் உள்ளது. காலம் வேகமாக மாறி வருகிறது. நீதித் துறை நிர்வாகத்தில் புதிய தொழில்நுட்பங்களை புகுத்த வேண்டும்.
    நமது நாட்டிலுள்ள 125 கோடி பேரில், 108 பேர் செல்லிடப்பேசி வைத்துள்ளனர். அதிலும் 35 கோடி பேரிடம் நவீன செல்லிடப்பேசிகள் உள்ளன. இந்த எண்ணிக்கை விரைவில் 50 கோடியாக அதிகரிக்கும்.
    இதுபோன்ற சூழலில், புதிய தொழில்நுட்பங்களின் மூலமே நல்ல நிர்வாகத்தை வழங்க முடியும். இதற்காக, கிராமங்கள்தோறும் பொதுச் சேவை மையங்கள் தொடங்கப்பட்டு வருகின்றன. இந்த மையங்கள் மூலம் நிரந்தர கணக்கு எண் அட்டை (பான் கார்டு), ஆதார் அட்டை, ரயில் டிக்கெட் முன்பதிவு போன்ற அரசின் மின்னணு சேவைகளைப் பெற முடியும். மேலும், நீதித் துறை சார்ந்த சேவைகளையும் இந்த மையங்கள் வாயிலாக மக்கள் பெறுவதற்கான நடவடிக்கையையும் மேற்கொள்ளவிருக்கிறோம் என்றார் அவர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai