சுடச்சுட

  

  ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம்: சைப்ரஸ் ஆதரவுக்கு இந்தியா வரவேற்பு

  By DIN  |   Published on : 30th April 2017 04:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினர் ஆவதற்கு சைப்ரஸ் நாடு அளித்த ஆதரவை இந்தியா வரவேற்றுள்ளது.
  இதுகுறித்து வெளியுறவுத் துறை அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்ட இந்தியா - சைப்ரஸ் கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
  பிரதமர் நரேந்திர மோடி, சைப்ரஸ் அதிபர் நிகோஸ் அனஸ்டாசியாட்ஸ் ஆகியோரிடையே வெள்ளிக்கிழமை நடைபெற்ற சந்திப்பின்போது, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் பிராந்திய பிரதிநிதித்துவத் தன்மையை மேம்படுத்தும் வகையில், அந்த அமைப்பில் இந்தியா நிரந்தர உறுப்பினராவதற்கு ஆதரவளிப்பதாக அதிபர் அனஸ்டாசியாட்ஸ் மீண்டும் உறுதியளித்தார்.
  அந்த ஆதரவை பிரதமர் மோடி வரவேற்றார். ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில், நாடுகளுக்கிடையிலான பேச்சுவார்த்தை உள்ளிட்ட சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கு மோடியும், அனஸ்டாசியாட்ஸும் ஆதரவு தெரிவித்தனர்.
  இந்தியாவுக்கும், சைப்ரஸுக்கும் இடையே அணு ஆயுதப் பரவலுக்கு எதிராக நிலவி வரும் ஒருமித்தக் கருத்தைக் குறிப்பிட்டுக் காட்டிய பிரதமர் மோடி, அணுசக்தி விநியோக நாடுகள் கூட்டமைப்பில் (என்எஸ்ஜி) இந்தியா இணைவதற்கு சைப்ரஸ் ஆதரவு தெரிவித்துள்ளதைப் பாராட்டினார்.
  மண்டல மற்றும் சர்வதேசப் பிரச்னைகள், குறிப்பாக பயங்கரவாத விவகாரம் குறித்த தங்களது கருத்துகளை இரு நாட்டுத் தலைவர்களும் பகிர்ந்துகொண்டனர்.
  பயங்கரவாதிகளை ஊக்குவித்து, அவர்களைப் பேணிகாத்து வருவோருக்கு மோடியும், அனஸ்டாசியாட்ஸும் கடும் கண்டனம் தெரிவித்தனர் என்று அந்த கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  4 ஒப்பந்தங்கள் கையெழுத்து: முன்னதாக, ஐந்து நாள் பயணமாக இந்தியா வந்த சைப்ரஸ் நாட்டு அதிபர் நிகோஸ் அனஸ்டாசியாட்ஸ், பிரதமர் நரேந்திர மோடியை வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினார். அப்போது, இரு தரப்பு உறவுகள் குறித்தும், பிராந்திய விவகாரங்கள் குறித்தும் இருவரும் விரிவாக விவாதித்தனர்.
  இந்தச் சந்திப்புக்குப் பிறகு, இந்தியா-சைப்ரஸ் இடையே விமானச் சேவை, கடல் வழி வர்த்தகம் ஆகியவற்றை ஊக்குவிப்பது உள்பட 4 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
  இதனிடையே, இந்தியாவில் சைப்ரஸ் அதிபர் மேற்கொண்ட ஐந்து நாள் சுற்றுப் பயணம் சனிக்கிழமையுடன் நிறைவுற்றது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai