சுடச்சுட

  
  amithsha

  ஜம்முவில், பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவுக்கு சனிக்கிழமை அளிக்கப்பட்ட வரவேற்பு.

  வரும் 2019-இல் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலை மனதில் கொண்டு, பாஜக-வை மேலும் வலுப்படுத்துவதற்காக அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா, நாடு தழுவிய 95 நாள் சுற்றுப்பயணத்தை ஜம்முவில் சனிக்கிழமை தொடங்கினார்.
  இதுதொடர்பாக, பாஜக சார்பில் டுவிட்டர் வலைதளத்தில் வெளியிடப்பட்ட பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:
  பாஜக தலைவர் அமித் ஷா, நாடு தழுவிய 95 நாள் சுற்றுப்பயணத்தை ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் சனிக்கிழமை தொடங்கினார்.
  வாக்குச் சாவடி அளவில் கட்சியை வலுப்படுத்துவதற்காகவும், கடைக்கோடி இந்தியர் வரை மத்திய அரசின் மக்கள்நலத் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும், இந்தப் பயணத்தை அவர் மேற்கொள்கிறார் என்று அந்தப் பதிவில் கூறப்பட்டுள்ளது.
  இந்நிலையில் பாஜக தலைவர் அமித் ஷா, ஜம்மு விமான நிலையத்துக்கு சனிக்கிழமை வந்தார். அவரை அமைச்சர்கள், கட்சியின் முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
  தொடர்ந்து, அவர் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், மேலவை உறுப்பினர்கள், கட்சியின் மாநிலப் பிரிவு தலைவர்கள் உள்ளிட்டோருடன் ஆலோசனையில் ஈடுபட்டார். மேலும், மூத்த குடிமக்களையும் அவர் சந்தித்துப் பேசினார்.
  ஜம்முவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள நூலகத் திறப்பு விழா, புத்தக வெளியீட்டு விழா, அரசுத் துறைகளின் தலைவர்களுடன் சந்திப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கிறார்.
  ஜம்மு - காஷ்மீரை ஆளும் மக்கள் ஜனநாயகக் கட்சியுடனான பாஜக-வின் உறவில் சலசலப்பு நிலவி வரும் நிலையில், அமித் ஷாவின் ஜம்மு பயணம் முக்கியத்துவம் பெறுகிறது.


   

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai