சுடச்சுட

  

  தவறு செய்துவிட்டோம்: தில்லி மாநகராட்சி தேர்தல் தோல்வி குறித்து கேஜரிவால்

  By DIN  |   Published on : 30th April 2017 01:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  kejriwal

  ஆம் ஆத்மி கட்சி சில தவறுகள் செய்துள்ளதாக அக்கட்சியின் தேசிய அமைப்பாளரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் கூறியுள்ளார்.
  தில்லி மாநகராட்சித் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தோல்வியடைந்ததற்கு வாக்குப்பதிவு இயந்திரங்களில் நடைபெற்ற முறைகேடுதான் காரணம் என்று கடந்த மூன்று தினங்களாக குற்றம்சாட்டிவந்த கேஜரிவால் தற்போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.
  இதுகுறித்து தனது சுட்டுரைப் பக்கத்தில் அவர் சனிக்கிழமை வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:
  கடந்த 2 நாள்களாக கட்சியின் தொண்டர்கள், வாக்காளர்களிடம் பேசினேன். அதன்மூலம், ஒன்று தெளிவாகத் தெரிகிறது. ஆம் ஆத்மி கட்சி தவறு செய்துள்ளது. ஆனால், தற்போதைய தேவை மன்னிப்பு அல்ல; அடுத்தகட்ட நடவடிக்கையாகும்.
  ஆம் ஆத்மி கட்சி தன்னை சுயபரிசோதனை செய்துகொண்டு, தவறுகளை திருத்திக் கொள்ளும்.
  அவற்றுக்கான சரியான திட்டமிடலை மேற்கொள்ளும் நேரம் இதுவாகும். கட்சி இன்னும் மாற்றத்தை எதிர்கொள்ளாமல் இருந்தால், அது வேடிக்கையானதாக இருக்கும்.
  இது, மீண்டும் பணியாற்ற வேண்டிய நேரமாகும். ஒவ்வொரு முறையும் நாங்கள் பின்னடைவை சந்தித்து வரும் நிலையில், அதற்கான காரணத்தை கண்டறிந்து அதை சரிசெய்து மீண்டும் மேலெழுந்து வருவோம். மாற்றம் ஒன்றே மாறாதது என்று கேஜரிவால் அதில் கூறியுள்ளார்.
  வழக்கமானதுதான்: பாஜக
  'தெரிந்தே தவறு செய்துவிட்டு பின்னர் மன்னிப்பு கோருவது முதல்வர் கேஜரிவாலுக்கு வழக்கமானதுதான் என்று தில்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரி விமர்சித்துள்ளார்.
  இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், 'மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டது, தில்லியில் 49 நாள்கள் ஆட்சி நடத்தியது என இதற்கு முன்பு நிகழ்ந்த சம்பவங்களை எண்ணிப்பார்க்க வேண்டும். தெரிந்தே தவறு செய்வது, பின்னர் அதற்காக மன்னிப்பு கோருவது கேஜரிவாலின் வழக்கமாகும்' என்றார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai