Enable Javscript for better performance
பாலியல் வழக்கில் முன்னாள் அமைச்சருக்கு ஜாமீன் வழங்கிய நீதிபதி பணியிடை நீக்கம்- Dinamani

சுடச்சுட

    

    பாலியல் வழக்கில் முன்னாள் அமைச்சருக்கு ஜாமீன் வழங்கிய நீதிபதி பணியிடை நீக்கம்

    By DIN  |   Published on : 30th April 2017 01:09 AM  |   அ+அ அ-   |    |  

    உத்தரப் பிரதேசத்தில் பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கிய முன்னாள் அமைச்சர் காயத்ரி பிரஜாபதிக்கு ஜாமீன் வழங்கிய சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.மிஸ்ரா சனிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
    அவரிடம் துறை ரீதியான விசாரணை நடத்துவதற்கு உத்தரவிடப்பட்டிருப்பதாக அலாகாபாத் உயர் நீதிமன்ற பதிவாளர் டி.கே.சிங் கூறினார்.
    பாலியல் பலாத்கார வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் காயத்ரி பிரஜாபதிக்கு சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தடுப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.மிஸ்ரா கடந்த செவ்வாய்க்கிழமை ஜாமீன் வழங்கினார்.
    எனினும், மற்ற இரு வழக்குகளில் அவரிடம் விசாரணை நடத்த வேண்டியிருப்பதால், அவரை நீதிமன்றக் காவலில் வைக்குமாறு மாநில காவல் துறை கோரிக்கை விடுத்திருந்தது. அதை, நீதிமன்றம் ஏற்றுக் கொண்டதால், அவர் மீண்டும் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார், அதனால், அவரால் வெளியே வர முடியவில்லை.
    பிரஜாபதியின் ஜாமீனை ரத்து செய்யக் கோரி மாநில அரசு சார்பில், அலாகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
    அந்த மனுவில், பிரஜாபதி தம் மீது குற்ற வழக்கு வேறு எதுவும் நிலுவையில் இல்லை என்ற தவறான தகவலைத் தெரிவித்து ஜாமீன் பெற்றிருக்கிறார் என்று மாநில அரசு தெரிவித்திருந்தது.
    அதையடுத்து, அவருக்கு அளிக்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்து அலாகாபாத் உயர் நீதிமன்ற லக்னெள அமர்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
    இந்தச் சூழலில், பிரஜாபதிக்கு ஜாமீன் வழங்கிய சிறப்பு நீதிமன்ற நீதிபதி சனிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
    சமாஜவாதி தலைவர் முலாயம் சிங்குக்கு நெருக்கமானவராகக் கருதப்படும் காயத்ரி பிரஜாபதி, முந்தைய அகிலேஷ் யாதவ் அரசில் அமைச்சராகப் பதவி வகித்தார்.
    இதனிடையே, காயத்ரி பிரஜாபதிக்கு எதிராகப் பெண் ஒருவர் கடந்த பிப்ரவரி மாதம் பாலியல் புகார் கொடுத்தார். அவரும், அவரது உதவியாளர்கள் இருவரும் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், தனது மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும் அந்தப் பெண் தனது புகாரில் தெரிவித்திருந்தார்.
    காயத்ரி பிரஜாபதி உள்ளிட்ட மூவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதையடுத்து, தலைமறைவாக இருந்த காயத்ரி பிரஜாபதி, லக்னெளவில் உள்ள ஆஷியானா பகுதியில் கடந்த மார்ச் மாதம் 15-ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.

    kattana sevai