சுடச்சுட

  

  மக்களவை தேர்தலுக்கான வியூகம்: ஜோத்பூரில் பாஜக இன்று கூட்டம்

  By DIN  |   Published on : 30th April 2017 12:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ராஜஸ்தானின் ஜோத்பூர் நகரில் ஞாயிற்றுக்கிழமை (ஏப். 30) தொடங்கும் இரண்டு நாள் பாஜக மாநில செயற்குழுக் கூட்டத்தில், வரும் 2019-ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலை எதிர்கொள்வதற்கான வியூகம் குறித்து விவாதிக்கப்படும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
  கட்சியின் மூத்த தலைவர்கள் கலந்து கொள்ளும் அந்த செயற்குழுக் கூட்டத்தை ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே தொடங்கி வைக்கிறார்.
  இதுகுறித்து ராஜஸ்தான் மாநில பாஜக பொதுச் செயலர் பஜன் லால் கூறியதாவது: மாநிலத்தில் அடுத்த ஆண்டு பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. அதனை எதிர்கொள்வதற்கான வியூகம் வகுப்பது குறித்தும், 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் வியூகம் குறித்தும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படும். கட்சித் தொண்டர்களை உற்சாகப்படுத்துவது, அரசின் திட்டங்களையும், கொள்கைகளையும் பொதுமக்களிடம் கொண்டு சேர்ப்பது போன்றவை குறித்தும் இந்த செயற்குக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்றார் அவர். இதற்கிடையே, உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்னும் இரு மாதங்களில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தல்களிலும் வெற்றிகளைக் குவிப்பதற்காக, தில்லி மாநகராட்சித் தேர்தலில் கையாண்ட தந்திரங்களையே அந்தத் தேர்தலிலும் பாஜக கையாளும் என்று கூறப்படுகிறது.
  இதுகுறித்து பாஜகவின் தில்லி பிரிவு செய்தித் தொடர்பாளர் அஸ்வினி உபாத்யாய கூறியதாவது:
  தில்லியில் மொத்தமுள்ள 270 உள்ளாட்சித் தொகுதிகளில், 262 தொகுதிகளில் புதியவர்களை நிறுத்தினோம். அந்தத் தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக வேட்பாளர்களின் சராசரி வயது வெறும் 39-தான்.
  உத்தரப் பிரதேச உள்ளாட்சித் தேர்தலிலும் முடிந்தவரை இளைஞர்களையும், புதியவர்களையும் நிறுத்துவோம் என்றார் அவர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai