சுடச்சுட

  

  மின்னணு வாக்குப் பதிவு இயந்திர விவகாரம்: விரைவில் அனைத்துக் கட்சிக் கூட்டம்: தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி

  By DIN  |   Published on : 30th April 2017 04:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  NAZIMZAIDI

  மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து விளக்கம் அளிப்பதற்காக, விரைவில் அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்படவுள்ளது என்று இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி கூறினார்.
  சண்டீகருக்குச் சனிக்கிழமை வந்த அவர், செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது, அண்மையில் நடைபெற்ற 5 மாநில சட்டப் பேரவைத் தேர்தலில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடைபெற்றதாகக் கூறி, 16 அரசியல் கட்சிகள் மனு அளித்தது குறித்து அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில்:
  தொழில்நுட்ப ரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் முறைகேடு எதுவும் செய்ய முடியாது. மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் எந்த அளவுக்கு பாதுகாப்பானவை என்பதை விளக்குவதற்காக, விரைவில் அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்படவுள்ளது.
  மேலும், மக்களின் சந்தேகத்தைத் தீர்ப்பதற்காக, ''மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் யாராவது முறைகேடு செய்து நிரூபித்துக் காட்டுங்கள்'' என்று பகிரங்கமாக சவால் விடுக்கவும் தேர்தல் ஆணையம் திட்டமிட்டு வருகிறது.
  இனி நடைபெறும் அனைத்து தேர்தல்களிலும் வாக்குப் பதிவு இயந்திரத்துடன் வாக்கு ஒப்புகைச் சீட்டு இயந்திரமும் பயன்படுத்தப்படும். அதனால், வாக்குப்பதிவில் வெளிப்படைத்தன்மையும், வாக்காளர்களுக்கு நம்பகத்தன்மையும் மேலும் அதிகரிக்கும்.
  வாக்கு ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களை வாங்குவதற்கான நிதியை மத்திய அரசிடம் இருந்து தேர்தல் ஆணையம் பெற்றுவிட்டது. 15 லட்சம் வாக்கு ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களை அளிக்குமாறு அரசின் பொதுத் துறை நிறுவனங்களான பாரத் எலக்ட்ரானிக்ஸ் (பிஇஎல்), இந்திய மின்னணு கழகம் (இசிஐ) ஆகியவற்றிடம் கேட்கப்பட்டுள்ளது. அந்த இயந்திரங்கள் அனைத்தும், அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதத்துக்குள் கிடைத்து விடும். தேர்தலில் 100 சதவீதம் ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களைப் பயன்படுத்தும் முதல் நாடாக இந்தியா இருக்கும் என்று நஜீம் ஜைதி கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai