சுடச்சுட

  

  முத்தலாக்கை அரசியலாக்க வேண்டாம்: முஸ்லிம்களுக்கு பிரதமர் வேண்டுகோள்

  By DIN  |   Published on : 30th April 2017 04:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  modi

  தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கன்னட தத்துவஞானி பசவேஸ்வரின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் பிரதமர் நரேந்திர மோடி.

  முத்தலாக் நடைமுறை தொடர்பான விவகாரம் அரசியலாக்கப்படுவதை அனுமதிக்கக் கூடாது என்று முஸ்லிம்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்தார்.
  12-ஆம் நூற்றாண்டு கன்னட தத்துவஞானி பசவேஸ்வரின் பிறந்த தினத்தையொட்டி, தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசியபோது, முத்தலாக் விவகாரத்தை எழுப்பினார். அப்போது அவர் கூறியதாவது:
  அண்மைக் காலமாக, முத்தலாக் நடைமுறை குறித்து பெரிய அளவில் விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த விவகாரத்தை அரசியல் கண்ணோட்டத்துடன் முஸ்லிம் சமூகத்தினர் பார்க்கக் கூடாது. இதற்கு தாங்களாக முன்வந்து, தீர்வு காண வேண்டும். இது உங்களுக்குத்தான் நன்மையைத் தரும். இதற்கு தீர்வு கண்டால், உங்களை பல தலைமுறையினர் நினைவுகூர்வார்கள்.
  இந்தியாவில் இருக்கும் சிறந்த கலாசாரத்தை பார்க்கையில், முஸ்லிம் சமூகத்தில் இருந்து அறிவுஜீவிகள் தோன்றி, காலத்துக்கு ஒவ்வாத இந்த நடைமுறைக்கு முடிவுகட்டவும், நவீனத்துவத்தை புகுத்தவும் உதவி செய்வார்கள் என்றும் நம்புகிறேன். அதேபோல், இந்திய முஸ்லிம்கள், நமது நாட்டில் இருக்கும் தங்களது மதத்தினருக்கு மட்டுமல்லாது, உலகம் முழுவதும் இருக்கும் முஸ்லிம் மக்களுக்கும் நவீனத்துவத்தின் பாதையை காட்ட வேண்டும். இதுபோன்ற சக்தி மற்றும் பலத்தை இந்த மண் நம் அனைவருக்கும் அளித்துள்ளது.
  முஸ்லிம் மதத்தில் இருந்து அறிவுஜீவிகள் தோன்றி, இந்த தண்டனையில் (முத்தலாக்) இருந்து தங்களது தாயார்கள், சகோதரிகளை விடுவிப்பார்கள் என்று உறுதியாக நம்புகிறேன் என்றார் மோடி.
  நிகழ்ச்சியில் 23 மொழிகளில் தொகுக்கப்பட்டிருக்கும் பசவேஸ்வரின் 2,500 பேருரைகளின் டிஜிட்டல் பதிப்பை மோடி வெளியிட்டார். அப்போது பிரதமர், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்ற தமது அரசின் கொள்கை குறித்து குறிப்பிட்டார். அவர் மேலும் கூறியதாவது:
  எந்தவித வேறுபாடுமின்றி, அனைத்து மக்களும் வீடுகள், மின்சாரத்தை பெற வேண்டும். விவசாயிகளுக்கு உரமும், காப்பீட்டு நன்மைகளும் கிடைக்க வேண்டும். இதுவே எனது அரசு கடைப்பிடிக்கும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்ற கொள்கையின் அர்த்தமாகும்.
  இந்திய வரலாறு என்பது, தோல்வி, வறுமை அல்லது காலனியாதிக்கத்தை மட்டுமே கொண்டது கிடையாது. நல்ல நிர்வாகம், சத்யாக்கிரகம், அஹிம்சை போன்ற செய்திகளை உலகத்துக்கு நமது நாடு தந்துள்ளது. பக்தி இயக்கத்தின்போது நமது சீர்திருத்தவாதிகள் அளித்த போதனைகளை தற்போதைய இளைஞர்கள் ஏற்பதில்லை. இதை நமது கல்வி முறையில் இருக்கும் குறைபாடு என்று சொல்வதா? அல்லது நமது சொந்த கலாசாரத்தின் முற்போக்கு கருத்தை நாமே ஏற்க மறுக்கிறோம் என்று சொல்வதா?
  தீய வழக்கங்களுக்கு எதிராக 700 ஆண்டுகளுக்கு முன்பே பசவேஸ்வர் போன்ற நமது நாட்டைச் சேர்ந்த சீர்திருத்தவாதிகள் ஆற்றிய உரைகள் எவ்வளவு முக்கியம் என்பது குறித்தும் தற்போதைய இளைஞர்களுக்குத் தெரியவில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
  நிகழ்ச்சியில் 'பசவா சொசைட்டி' அமைப்பை கடந்த 1964-ஆம் ஆண்டில் ஏற்படுத்திய முன்னாள் குடியரசு துணைத் தலைவர் பி.டி. ஜாட்டிக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் கர்நாடக மாநிலம், தார்வாடில் கொல்லப்பட்ட முற்போக்கு எழுத்தாளர் கலபுர்கியின் குடும்பத்தினரும் கலந்து கொண்டிருந்தனர்.
  இதையறிந்த பிரதமர் மோடி நிகழ்ச்சி மேடையில் இருந்து இறங்கிச் சென்று கலபுர்கியின் குடும்பத்தினரை நேரில் சந்தித்துப் பேசினார். இந்நிகழ்ச்சியில், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் அனந்த் குமாரும் கலந்து கொண்டார்.
  முஸ்லிம் மதத்தில் பெண்களுக்கு விவாகரத்து அளிப்பதற்கு முத்தலாக் நடைமுறை பின்பற்றப்படுகிறது. இந்த நடைமுறையை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
  இந்த சூழ்நிலையில், ஒடிஸா மாநிலம், புவனேசுவரத்தில் அண்மையில் நடைபெற்ற பாஜக தேசிய செயற்குழுக் கூட்டத்தில் முத்தலாக் விவகாரம் குறித்து மோடி பேசியிருந்தார். அப்போது அவர், முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த பெண்களுக்கு அநீதி இழைக்கப்படுவதை அனுமதிக்கக் கூடாது என்று கேட்டுக் கொண்டார். அதைத் தொடர்ந்து, 2-ஆவது முறையாக முத்தலாக் விவகாரம் குறித்து அவர் தற்போது பேசியுள்ளார்.

   

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai