சுடச்சுட

  

  முத்தலாக் விவகாரத்தை அரசியலாக்குவது பாஜகதான்: காங்கிரஸ்

  By DIN  |   Published on : 30th April 2017 12:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  முத்தலாக் முறையை வைத்து பிரதமர் நரேந்திர மோடியும், பாஜக தலைவர்களும்தான் அரசியல் செய்கின்றனர் என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
  இதுதொடர்பாக, அக்கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆஸாத் கூறியதாவது:
  முத்தலாக் விவாகரத்து முறையை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து மக்கள் விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த விவகாரத்தை நீதிமன்றமும் ஆராய்ந்து வருகிறது.
  இந்த நேரத்தில், முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த கணவன்-மனைவி இடையே பாஜக ஏன் தேவையின்றித் தலையிடுகிறது? வாக்கு வங்கிக்காக, முஸ்லிம் பெண்களுக்கும், அவர்களது கணவர்களுக்கும் இடையே விரிசலை உருவாக்க பாஜக முயன்று வருகிறது.
  முத்தலாக் முறையை அரசியலாக்கிய மிகப்பெரிய ஜாம்பவான் பிரதமர்தான். முத்தலாக் முறையை அரசியலாக்க வேண்டுடாம் என்று அவர் கூறியதில் இருந்தே, இந்த விவகாரம் அரசியலாக்கப்பட்டு விட்டது. எனவே, முத்தலாக் முறையை வைத்து அரசியல் செய்வதை பிரதமர் நிறுத்திக் கொள்ள வேண்டும். மேலும், அவ்வாறு செய்யும் தனது கட்சியினரையும் அவர் தடுத்து நிறுத்த வேண்டும்.
  முத்தலாக் முறையை எந்தவொரு முஸ்லிமும் தவறாகப் பயன்படுத்துவதாக நான் கருதவில்லை. ஏனெனில், அந்த முறையை தவறாகப் பயன்படுத்துவது, இஸ்லாத்துக்கு எதிரானதாகும்.
  பல்வேறு மதங்களில் பன்னெடுங்காலமாக பின்பற்றப்பட்டு வரும் சடங்குகள், காலமாற்றத்துக்கு ஏற்ப கைவிடப்படுகின்றன. ஹிந்து சமூகத்தில் கூட நீடித்து வந்த பெண்கள் உடன்கட்டை ஏறுவது ஒழிக்கப்பட்டு விட்டது.
  மக்கள் விவாதிக்கத் தொடங்கிய பிறகு, மக்கள் நலனுக்கு உகந்தவை தொடர்ந்து பின்பற்றப்படும். அதுபோலவே, முத்தலாக் முறையும் குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு கைவிடப்பட்டு விடும் என்றார் குலாம் நபி ஆஸாத்.
  மற்ற பிரச்னைகளையும் மோடி பேசுவாரா? -ஆஸம் கான்: இதனிடையே, முத்தலாக் முறை தவிர, முஸ்லிம் சமூகப் பெண்களின் மற்ற பிரச்னைகள் குறித்தும் பிரதமர் மோடி பேச வேண்டும் என்று சமாஜவாதி கட்சியின் மூத்த தலைவர் ஆஸம் கான் வலியுறுத்தினார். 'குறிப்பாக, பசுப் பாதுகாவலர்களின் வன்முறையால் கணவர் மற்றும் மகன்களைப் பறிகொடுத்த முஸ்லிம் பெண்களுக்கு பிரதமர் மோடி இரக்கம் காட்ட வேண்டும்; குஜராத் வன்முறையின்போது முஸ்லிம் பெண்களின் வீடுகள் சூறையாடப்பட்டது குறித்தும் மோடி பேச வேண்டும்' என்று ஆஸம் கான் கூறினார்.
  இதேபோல், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ஐக்கிய ஜனதா தளத் தலைவர் சரத் யாதவ் உள்ளிட்டோரும் மோடியின் பேச்சை விமர்சித்துள்ளனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai