சுடச்சுட

    

    வாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மை: அகிலேஷ் யாதவ் மீண்டும் கேள்வி

    By DIN  |   Published on : 30th April 2017 12:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    AkhileshYadav

    மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மை குறித்து சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் மீண்டும் கேள்வி எழுப்பியுள்ளார்.
    உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு அண்மையில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற்றது. உத்தரப் பிரதேச பேரவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றது. சமாஜவாதி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தோல்வியைத் தழுவின.
    இத்தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடைபெற்றதாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி குற்றம்சாட்டினார். அதேபோல், சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவும், காங்கிரஸ் தலைவர்களும் இதே குற்றச்சாட்டைக் கூறினர். மீண்டும் வாக்குச்சீட்டு முறையைக் கொண்டு எதிர்காலத்தில் தேர்தல்களை நடத்த வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். எனினும், வாக்குப்பதிவு இயந்திரங்களில் எந்த முறைகேட்டையும் செய்ய முடியாது என்று தேர்தல் ஆணையம் தொடர்ந்து மறுப்பு அறிக்கைகளை வெளியிட்டது.
    இந்நிலையில், உத்தரப் பிரதேசத்தில் 7 பெட்ரோல் நிலையங்களில் மின்னணு சில்லுகள் (சிப்) மூலம் நடைபெற்ற மோசடி தொடர்பாக போலீஸார் அதிரடிச் சோதனை நடத்தியதை சுட்டிக்காட்டி, சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், சுட்டுரையில் சனிக்கிழமை ஒரு பதிவை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
    இணையதளத் தொடர்பு இல்லாமலேயே, தொலைவில் இருந்து இயக்கக்கூடிய சாதனத்தின் துணையுடன் மின்னணு சில்லு மூலம் பெட்ரோல் திருடப்படுகிறது. அதேபோல் தேர்தல்களில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் தவறாகப் பயன்படுத்தப்படும் வாய்ப்புகள் உள்ளன.
    தொழில்நுட்பம் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுத்து நிறுத்த வேண்டியது அவசியம் என்று அந்தப் பதிவில் அகிலேஷ் தெரிவித்துள்ளார்.
    இந்த விவகாரம் தொடர்பாக அவர் லக்னௌவில் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் எப்போது கோளாறு ஏற்படும் என்பதையோ, அதன் மென்பொருள் எப்போது முடங்கும் என்பதையோ யாராலும் கூற முடியாது. இயந்திரங்களை நம்பி விட முடியாது. எங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது நம்பிக்கை இல்லை' என்று குறிப்பிட்டார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai