Enable Javscript for better performance
பொது நல வழக்கில் பதிலளிக்கத் தவறிய மத்திய அரசுக்கு ரூ.30,000 அபராதம்- Dinamani

சுடச்சுட

    

    பொது நல வழக்கில் பதிலளிக்கத் தவறிய மத்திய அரசுக்கு ரூ.30,000 அபராதம்

    By DIN  |   Published on : 07th February 2017 12:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் சிறுபான்மையினருக்கான சலுகைகளை முஸ்லிம்கள் அனுபவிப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொது நல வழக்கில் பதிலளிக்கத் தவறியதற்காக மத்திய அரசுக்கு ரூ. 30,000 அபராதம் விதிக்கப்பட்டது.

    வழக்கு விவரம்: ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் பெரும்பான்மையினத்தவராக உள்ள முஸ்லிம்கள், சிறுபான்மையினருக்கான சலுகைகளை முழுவதுமாக தட்டிப் பறிக்கின்றனர். எனவே, இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி ஜம்முவைச் சேர்ந்த வழக்குரைஞர் அங்குர் சர்மா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனுவை தாக்கல் செய்திருந்தார்.
    அந்த மனுவை, தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், நீதிபதி என்.வி.ரமணா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
    இந்த வழக்கு தொடர்பாக மத்திய அரசு தனது பதிலை இதுவரை தாக்கல் செய்யாததால், ரூ. 30,000 அபராதம் விதிக்கப்படுகிறது.
    அபராதத் தொகையை செலுத்திய பின் 2 வார காலத்துக்குள் மத்திய அரசு தனது பதிலை தாக்கல் செய்ய வேண்டும். இதேபோல், சென்ற முறையும் பதிலளிக்காத காரணத்தால் ரூ. 15,000 அபராதம் ஏற்கெனவே விதிக்கப்பட்டிருந்தது.
    இது மிக முக்கியமான பிரச்னை என்பதால், இதுகுறித்து பதிலளிப்பதற்கு மத்திய அரசுக்கு அளிக்கப்படும் இறுதி வாய்ப்பு இதுவேயாகும் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
    இதைத் தொடர்ந்து, இந்த வழக்கு தொடர்பாக மத்திய அரசு, ஜம்மு - காஷ்மீர் மாநில அரசு, தேசிய சிறுபான்மையினர் ஆணையம் ஆகியவற்றுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai