
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி, இன்று தனது 45-வது பிறந்தநாளை கொண்டாடினார். இதையடுத்து, அவருக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
கிரிக்கெட்டின் தாதா, பிரின்ஸ் ஆஃப் கொல்கத்தா போன்ற அடைமொழிகளுடன் அன்போடு அழைக்கப்பட்டவர் சௌரவ் கங்குலி. மேற்கு வங்க வீரரான இவர் இந்திய கிரிக்கெட்டின் அசைக்க முடியாத சக்தியாக உருவெடுத்தவர்.
இந்திய கிரிக்கெட்டை அடுத்த கட்டத்துக்கு அழைத்துச் சென்றவர். இவரது தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி புதிய பரிணாமத்தை அடைந்தது. அதுவரையில் அந்நிய மண்ணில் அவ்வப்போது ஜொலித்த இந்திய அணிக்கு புது உத்வேகம் அளித்து எப்போதும் ஜொலிக்கும்படி செய்தவர்.
இவரது தலைமையிலான இந்திய அணி வெளிநாடுகளில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றிபெற்று கோப்பைகளையும் கைப்பற்றியுள்ளது. மேலும், அணியில் மூத்த வீரர்கள் மற்றும் இளைய வீரர்களுக்கு சம அளவில் வாய்ப்பு வழங்கியவர். இதன்மூலம் பல இளம் வீரர்கள் எதிர்காலத்தில் சாம்பியன்களாக உருவாக்கினர். அவர்களில் குறிப்பிடும்படியாக, சேவாக், யுவராஜ், ஹர்பஜன், ஜாகீர் ஆகியோர் அடங்குவர்.
சௌரவ் கங்குலி, முதன்முதலில் உலக கிரிக்கெட்டின் மெக்கா என்றழைக்கப்பட்ட இங்கிலாந்தின் லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் 1996-ம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் களமிறங்கி அசத்தினார். ஆம், அறிமுக போட்டியிலேயே சதமடித்து உலக கிரிக்கெட்டின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்தவர்.
இதுவரை இந்திய அணிக்கு 49 டெஸ்ட் போட்டிகளிலும், 147 ஒருநாள் போட்டிகளிலும் கேப்டனாக செயல்பட்டவர். மொத்தம் 113 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 7,212 ரன்கள் குவித்துள்ளார். சராசரி 42.17 ஆகும். அதுபோல 311 ஒருநாள் போட்டிகளில் 11,363 ரன்களை குவித்துள்ளார். அதிகபட்சமாக ஒரு போட்டியில் 183 ரன்கள் விளாசினார்.
அவ்வப்போது தனது பந்துவீச்சாலும் எதிரணியை திக்குமுக்காட வைப்பவர். இந்திய அணியை 2003-ம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப்போட்டி வரை அழைத்துச் சென்றவர். இங்கிலாந்தில் நடைபெற்ற நாட்வெஸ்ட் தொடரை வென்று, அந்த மைதானத்தின் பால்கனியில் தனது மேல் சட்டையை கழற்றி வெற்றியைக் கொண்டாடியது குறிப்பிடத்தக்க தருணமாகும்.
இந்நிலையில், சௌரவ் கங்குலிக்கு யுவராஜ், சேவாக் போன்ற பல்வேறு கிரிக்கெட் வீரர்கள் தங்கள் ட்விட்டர் பதிவின் மூலம் 45-ஆவது பிறந்தநாள் வாழ்த்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
இந்தியாவின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான சௌரவ் கங்குலிக்கு எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள் என ஐசிசி தெரிவித்துள்ளது. மேலும், கங்குலியிடம் ரசிகர்களுக்கு பிடித்த தருணம் குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளது.
ஹேப்பி பர்த்டே தாதா என்ற ஹேஷ்டாக்குடன் கங்குலிக்கு பிறந்தநாள் வாழ்த்தினை பதிவிட்டது பிசிசிஐ. இவ்வருடம் இனிதே அமைய வேண்டும் என்றும் தெரிவித்தது.
லார்ட்ஸ் மைதானத்தில் தங்களின் சட்டை உயரப் பறக்கவிட்டது போல், கிரிக்கெட் உலகில் இந்தியாவின் தேசியக் கொடியையும் உயரப் பறக்கச் செய்தீர்கள். தாதாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். ஆஃப் ஸைடு திசையில் நீங்கள் என்றும் தாதா தான். நீங்கள் இல்லையென்றால் நான் இந்திய அணியில் இல்லை. குறிப்பாக டெஸ்ட் போட்டிகளில் நான் செய்த சாதனைகளுக்கு நீங்கள் தான் காரணம் என்று பதிவிட்டுள்ளார்.
என் இனிய சௌரவ் கங்குலிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள், லவ் யூ தாதா என யுவராஜ் ட்வீட் தட்டினார்.
தாதாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். இந்திய அணியில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டுவந்தவர். நீங்கள் எப்போதும் ஒரு லெஜண்ட். சிறந்த வாழ்க்கையை எப்போதும் தொடர வேண்டும் என முகமது கயிஃப் வாழ்த்தினார்.
தாதாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். மேற்கு வங்க கிரிக்கெட்டுக்கு எப்போதும் போல் நல்வழி காட்டிடுங்கள் என பிரக்ஞான் ஓஜா கூறியுள்ளார்.
வாழ்த்துக்கள் கங்குலி, இன்றைய பொழும், இந்த வருடமும் இனியதாய் அமைந்திட என மனமார்ந்த வாழ்த்துக்கள் என்று லஷ்மண் ட்வீட் செய்தார்.
நம் வாழ்வில் சிறந்த தருணங்களை அளித்த சௌரவ் கங்குலிக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என சேத்தேஷ்வர் புஜாரா கூறினார்.