ஜிஎஸ்டி அறிமுக விழா: காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமல்படுத்தப்படுவதை முன்னிட்டு நாடாளுமன்ற மைய மண்டபத்தில் மத்திய அரசு வெள்ளிக்கிழமை (ஜூன் 30) ஏற்பாடு செய்துள்ள
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் தில்லியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் தில்லியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமல்படுத்தப்படுவதை முன்னிட்டு நாடாளுமன்ற மைய மண்டபத்தில் மத்திய அரசு வெள்ளிக்கிழமை (ஜூன் 30) ஏற்பாடு செய்துள்ள சிறப்புக் கூட்டத்தைப் புறக்கணிக்க காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.
நாடு முழுவதும் ஒரே சீரான வரி விதிப்பை உறுதி செய்வதற்காக, ஜிஎஸ்டி சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த சட்டமானது ஜூலை 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது. இதனை முன்னிட்டு நாடாளுமன்றத்தில் வரும் 30-ஆம் தேதி இரவு சிறப்பு நிகழ்ச்சி ஒன்றுக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. இதில் பங்கேற்குமாறு அனைத்துக் கட்சிகளுக்கும் பாஜக தலைமையிலான மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
காங்கிரஸ் ஆலோசனை: இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதா, வேண்டாமா என்பது குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் தில்லியில் வியாழக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இல்லத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், இருவேறு கருத்துகள் பகிர்ந்து கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது.
குறிப்பாக, ஜிஎஸ்டி சட்டமானது காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்டது என்பதால், அந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் கலந்து கொள்வதே சிறப்பாக இருக்கும் என காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒரு சாரர் தெரிவித்ததாகத் தெரிகிறது.
புறக்கணிக்க முடிவு: எனினும், இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த சில தலைவர்கள், தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஜிஎஸ்டி சட்டத்தில் பல்வேறு மாநிலங்களின் நலன்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பதாகவும், அவசரகோலத்தில் செயல்படுத்தப்படுவதாகவும் குற்றம்சாட்டினர். ஆகையால், இந்தக் கூட்டத்தை காங்கிரஸ் புறக்கணிப்பதே சிறந்த முடிவாக இருக்கும் என அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, நாடாளுமன்றத்தில் நடைபெறும் ஜிஎஸ்டி சிறப்பு நிகழ்ச்சியில் காங்கிரஸ் பங்கேற்காது என அந்தக் கூட்டத்தில் ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது.
இந்திய கம்யூனிஸ்ட் பங்கேற்காது: இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா கூறியதாவது: ஜிஎஸ்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் உள்ள சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் போராட்டம் நடத்தி வருகின்றன. ஜிஎஸ்டி அமலாக்கம் குறித்து மக்களிடையே பல குழப்பங்கள் இருக்கின்றன. மேலும், ஜிஎஸ்டி அமல்படுத்தப்படும்பட்சத்தில், நாட்டில் உள்ள முறை சாரா தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். இவ்வாறு மக்களும், தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டிருக்கும் சூழலில், இந்தக் கொண்டாட்ட நிகழ்வில் எங்களால் (இந்திய கம்யூனிஸ்ட்) எப்படி பங்கேற்க முடியும்? என டி.ராஜா தெரிவித்தார்.
திமுக, திரிணமூல்: தமிழக எதிர்க்கட்சியான திமுக-வும் ஜிஎஸ்டி சிறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க மாட்டோம் என்று கூறிவிட்டது. இந்த நிகழ்ச்சியில் தாங்கள் பங்கேற்கப் போவதில்லை என்று திரிணமூல் காங்கிரஸ் முன்னதாகவே அறிவித்துவிட்டது.
இந்த விஷயம் குறித்துப் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, 'பாஜக எதிர்க்கட்சியாக இருந்தபோது குஜராத் முதல்வராக இருந்து மோடி, ஜிஎஸ்டி-யை முழுமூச்சுடன் எதிர்த்துவிட்டு, இப்போது ஆட்சிக்கு வந்த பிறகு அதனை அமல்படுத்த அவசரம் காட்டுவது ஏன்?' என்று கேள்வி எழுப்பியிருந்தார். எனவே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்காது என்றே தெரிகிறது.
ஜேட்லி வேண்டுகோள்: இந்நிலையில், தில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அருண் ஜேட்லி ஜிஎஸ்டி சிறப்பு நிகழ்ச்சியில் எதிர்க்கட்சிகள் பங்கேற்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்தார். அவர் கூறியதாவது: அனைத்து மாநில அரசுகள், அரசியல் கட்சிகளுடன் இணைந்துதான் ஜிஎஸ்டியின் அனைத்து விதிகளும் வகுக்கப்பட்டன. எனவே, ஜிஎஸ்டி சிறப்பு நிகழ்ச்சியில் அனைத்துக் கட்சிகளும் பங்கேற்க வேண்டும். இந்த நிகழ்ச்சியை புறக்கணிப்பதாக அறிவித்துள்ள எதிர்க்கட்சிகள், தங்கள் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com