சுடச்சுட

    

    கல்லறைகள் கட்டுவதற்கு தடை விதிக்க வேண்டும்: சாக்ஷி மகராஜ் பேச்சால் சர்ச்சை

    By DIN  |   Published on : 01st March 2017 12:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    SAKSHI

    நாட்டில் கல்லறைகள் கட்டுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று பாஜகவைச் சேர்ந்த சர்ச்சைக்குரிய எம்.பி. சாக்ஷி மகராஜ் தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியது.
    இதுகுறித்து அவர் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
    ஒவ்வொரு கல்லறையை அடுத்தும் ஓர் உடல்தகன மேடைக் கூடம் அமைக்கப்பட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஆனால், கல்லறைகளை தொடர்ந்து கட்டிக் கொண்டே போகக் கூடாது. இது தொடர்ந்து நடைபெற்றால், நாட்டில் உள்ள நிலம் அனைத்தும் கல்லறை கட்டுவதற்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டுவிடும். இதனால் விவசாயத்துக்கு நிலமே இல்லாமல் போய்விடக்கூடும்.
    உலகில் உள்ள முஸ்லிம் நாடுகளில் கல்லறைகள் கட்டும் வழக்கம் இல்லை. அந்த நாடுகளில் உடல்கள் எரியூட்டப்படுகின்றன. இந்தியாவில் 3.5 கோடி ஹிந்துத் துறவிகள் உள்ளனர். அவர்கள், மரணத்துக்கு பிறகு உடலை புதைக்கும் வழக்கத்தை பின்பற்றி வருகின்றனர். எனவே, நாட்டில் உடல்தகனக் கூடம் மட்டுமே இருக்க நடவடிக்கை எடுக்கும்படி பிரதமருக்கு நான் வேண்டுகோள் விடுக்கிறேன்.
    கல்லறைகளுக்கு தடை விதிக்கும் வகையில் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும். அனைத்து சமூகத்தினரும் ஒரே இடத்தில் இறந்தவர்களின் உடலை எரியூட்ட வேண்டும். அப்படியிருந்தால், அதன் முடிவும் நல்லவிதமாக இருக்கும் என்றார் சாக்ஷி மகராஜ்.
    காங்கிரஸ், சமாஜவாதி கண்டனம்: அவரது இந்த கருத்து பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. சாக்ஷி மகராஜின் கருத்து சமூகத்தில் பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக காங்கிரஸ், சமாஜவாதி ஆகிய கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
    சாக்ஷி மகராஜ் விளக்கம்: இந்நிலையில், தனது கருத்து குறித்து சாக்ஷி மகராஜ் செவ்வாய்க்கிழமை மாலை விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
    நாட்டில் மக்கள்தொகை எண்ணிக்கை அதிகரித்து வருகிறது; நிலத்தின் அளவோ குறைவாகவே உள்ளது. நிலத்தை கல்லறைகள் கட்டுவதற்காக மட்டுமே பயன்படுத்தினால், மக்கள் எங்கு போய் வாழ்வார்கள்?
    பிரதமர் என்ன தெரிவித்தாரோ, அதற்கு எதிராக நான் எதுவும் தெரிவிக்கவில்லை. யாரையும் புதைக்க வேண்டிய அவசியமில்லை என்றார் சாக்ஷி மகராஜ்.
    உத்தரப் பிரதேச மாநிலம், உன்னாவ் மக்களவைத் தொகுதி பாஜக எம்.பி.யாக அவர் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai