சுடச்சுட

  

  சரிவர பணியாற்றாத எம்.பி., எம்.எல்.ஏ.க்களை திருப்பி அழைக்க வகை செய்யும் மசோதா: மக்களவையில் வருண் காந்தி தாக்கல்

  By DIN  |   Published on : 01st March 2017 03:44 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  varun

   

  சரிவர பணியாற்றாத மக்கள் பிரதிநிதிகளை (எம்.பி.,எம்.எல்.ஏ.) திருப்பி அழைக்க வகை செய்யும் மசோதாவை மக்களவையில் பாஜக எம்.பி. வருண் காந்தி கொண்டு வந்துள்ளார்.
  1951-ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில், மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகளை (எம்.பி., எம்.எல்.ஏ.) வாக்காளர்கள் திருப்பி அழைத்துக் கொள்ள வழிவகை செய்யப்படவில்லை.
  இந்நிலையில், பாஜக எம்.பி.யும், மத்திய அமைச்சர் மேனகா காந்தியின் மகனுமான வருண் காந்தி மக்களவையில் தனிநபர் மசோதா பிரிவின்கீழ் ஒரு மசோதாவைக் கொண்டு வந்துள்ளார்.
  அதில் அவர், உலகின் பல்வேறு நாடுகளிலும் மக்கள் பிரதிநிதிகளின் செயல்பாட்டின்மீது திருப்தியில்லை எனில், அவர்களை திருப்பி அழைத்துக் கொள்ளும் உரிமை மக்களுக்கு அளிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார்.
  இந்திய வாக்காளர்களுக்கு இதேபோன்ற உரிமையை அளிக்கும் வகையில் 1951-ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
  அந்த மசோதாவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
  சம்பந்தப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்ட தொகுதியில் வசிக்கும் வாக்காளர்களில் 75 சதவீதம் பேர், அந்தப் பிரதிநிதி தேர்வு செய்யப்பட்ட 2 ஆண்டுகளுக்குப் பிறகு அவரின் செயல்பாடு திருப்தியளிக்கவில்லை என்று கருதும்பட்சத்தில், அவரை திருப்பி அழைத்துக் கொள்ள உரிமை வழங்க வேண்டும். சம்பந்தப்பட்ட தொகுதியில் வசிக்கும் எந்தவொரு வாக்காளரும், சட்டப் பேரவைத் தலைவர் அல்லது மக்களவைத் தலைவரிடம் இதுதொடர்பான மனுவை அளிக்கலாம். ஆனால், அந்த மனுவில், குறிப்பிட்ட தொகுதியில் வசிக்கும் வாக்காளர்களில் 4-இல் ஒரு பகுதியினர் கையெழுத்திட்டிருக்க வேண்டும்.
  அந்த மனு மீதான நம்பகத்தன்மையை பேரவைத் தலைவர், மக்களவைத் தலைவர் முதலில் உறுதி செய்வார். அதனையடுத்து, மனுவில் கையெழுத்திட்டிருக்கும் வாக்காளர்கள் உண்மையானவர்கள் தானா? என்பதை உறுதிப்படுத்துவதற்கு அதை தேர்தல் ஆணையத்துக்கு அவர் அனுப்பி வைக்க வேண்டும். வாக்காளர்களை தேர்தல் ஆணையம் உறுதி செய்தபிறகு, சம்பந்தப்பட்ட தொகுதியில் 10 இடங்களில் வாக்குப்பதிவு நடத்த வேண்டும்.
  அந்த வாக்குப்பதிவில் பதிவாகும் 4-இல் 3 பங்கு வாக்குகள், மக்கள் பிரதிநிதிகளுக்கு எதிராக இருந்தால், அவரின் பதவி பறிக்கப்பட வேண்டும்.
  இந்த முடிவு எடுக்கப்பட்ட 24 மணி நேரத்தில், அதை அறிவிக்கையாக பேரவைத் தலைவர் வெளியிட வேண்டும். பிறகு, அந்தத் தொகுதியில் இடைத் தேர்தலை தேர்தல் ஆணையம் நடத்த வேண்டும்.
  இந்த முறை மூலம், மக்கள் பிரதிநிதிகளுக்கு அநீதி இழைக்கப்படுவதை தடுப்பதற்கும் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று அந்த மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai