சுடச்சுட

    

    ஜாட் விவகாரம்: ஹரியாணா சட்டப் பேரவையில் இன்று விவாதம்

    By DIN  |   Published on : 01st March 2017 02:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஜாட் விவகாரம் குறித்து ஹரியாணா சட்டப் பேரவையில் புதன்கிழமை (மார்ச் 1) விவாதிக்கப்படவுள்ளது.
    ஹரியாணா மாநிலத்தில் கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் இட ஒதுக்கீடு கோரி ஜாட் சமூகத்தினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
    இந்நிலையில், ஹரியாணா சட்டப் பேரவையில் இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ், இந்திய தேசிய லோக் தளம் ஆகிய கட்சிகள் ஒத்திவைப்பு தீர்மானத்தை செவ்வாய்க்கிழமை கொண்டு வந்தன. இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவர் அபய் சிங் சௌதாலா (இந்திய தேசிய லோக் தளம்) பேசுகையில், ’ஜாட் போராட்டக் குழுவின் கோரிக்கைகளை ஏற்பதாக அறிவித்துவிட்டு, பிறகு அதில் இருந்து மாநிலத்தை ஆளும் பாஜக அரசு பின்வாங்கி விட்டது' என்று குற்றம்சாட்டினார்.
    சட்டப் பேரவைத் தலைவர் கன்வர் பால் பதிலளித்தபோது, இந்த விவகாரம் குறித்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டி, இதனால் பேரவையில் அதன்மீது விவாதம் நடத்தலாமா? என்று பரிசீலித்து முடிவெடுக்கப்படும் என்றார். அப்போது காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான பூபிந்தர் சிங் ஹூடா குறுக்கிட்டு, ’இட ஒதுக்கீடு விவகாரம் குறித்துதான் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது; எனவே பிற விவகாரம் குறித்து பேரவையில் விவாதம் நடத்தலாம்' என்றார்.
    இதையடுத்து பேரவையை சிறிது நேரத்துக்கு கன்வர் பால் ஒத்திவைத்தார். பிறகு, காங்கிரஸ், இந்திய தேசிய லோக்தளம் ஆகிய எதிர்க்கட்சிகளின் தலைவர்களுடன் அவர் ஆலோசனை நடத்தினார். பின்னர் சட்டப் பேரவைத் தொடங்கியதும், ஜாட் போராட்ட விவகாரம் புதன்கிழமை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று கன்வர் பால் அறிவித்தார்.
    இதனிடையே, பேரவையில் முதல்வர் மனோகர் லால் கட்டர் பேசுகையில், ’அனைத்து விவகாரம் குறித்தும் பேசுவதற்கு மாநில அரசு தயாராக உள்ளது. ஆனால், அதே நேரத்தில் இட ஒதுக்கீடு குறித்து வழக்கு நடைபெறுவதால், அதுதவிர்த்து, பிற விவகாரம் குறித்து பேரவையில் புதன்கிழமை விவாதிக்கப்படும்' என்றார்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai