சுடச்சுட

  

  மோடியின் கனவு திட்டத்தை தவிடுபொடியாக்குமா நெடுவாசல் போராட்டம்?

  By DIN  |   Published on : 01st March 2017 03:12 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  modi


  சென்னை: இந்தியா எரிசக்தித் துறையில் தன்னிறைவு அடைய வேண்டும் என்ற கொள்கை கொண்ட பிரதமர் மோடியின் கனவுத் திட்டத்தில் ஒன்றுதான் ஹைட்ரோ கார்பன் திட்டம்.

  இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் மிகக் குறைந்த அளவில் கிடைக்கும் எரிவாயுக்களை ஒருங்கிணைத்து, அதன் மூலம் இந்தியாவின் எரிசக்தித் தேவையை இறக்குமதியின்றி தன்னிறைவு செய்ய விரும்பினார்.

  ஆனால், மோடியின் இந்த மிகப்பெரிய திட்டத்துக்கு, நெடுவாசல் கிராம மக்கள் செய்து வரும் போராட்டம் மிகப்பெரிய தடைக்கல்லை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தியா முழுவதும் சோதனை நடைபெற்ற 31 இடங்களில் தமிழகத்தில் ஒரே ஒரு இடம்தான் தேர்வு செய்யப்பட்டது. அதுதான் நெடுவாசல்.

  ஆனால், அந்த ஒரே ஒரு பகுதியே, இந்த முழுத் திட்டத்துக்குமான சிக்கலை ஏற்படுத்தும் என்று மத்திய அரசு நினைத்திருக்க வாய்ப்பில்லை.

  புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் பகுதியில், ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 14 நாட்களாக போராட்டம் வெடித்துள்ளது. இதற்கு கூடங்குளம் போராட்டக் குழு தலைவர் உதயகுமார், பேரறிவாளன் தாயார் அற்புதமம்மாள், சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி உள்ளிட்ட ஏராளமான பிரபலங்களும், பொது மக்களும் தங்களது ஆதரவை தெரிவித்துள்ளது போராட்டத்துக்கு மேலும் வலு சேர்த்துள்ளது.

  2015ம் ஆண்டு ஆய்வுப் பணிகளை தொடங்கிய ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு பிப்ரவரி 15ம் தேதிதான் மத்திய அரசு அனுமதி வழங்கியது. அப்போதே அதற்கு எதிர்ப்பும் கிளம்பிவிட்டது.

  இந்தியா தற்போது தனது மொத்த எரிசக்தித்  தேவையில் 80 சதவீத எரிபொருளை கச்சா எண்ணெயாக வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து வருகிறது. எனவே, வரும் 2022ம் ஆண்டில் இறக்குமதியை 10 சதவீதமாகக் குறைக்க வேண்டும் என்ற இலக்கை நோக்கியே மோடியின் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது.

  இதற்காக இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் 31 ஹைட்ரோ கார்பன் பகுதிகள் தேர்வு செய்யப்பட்டன. அசாமில் 9 பகுதிகள், மும்பையில் 6 இடங்கள், குஜராத்தில் 5, ஆந்திராவில் 4 பகுதிகளும், தமிழகத்தில் ஒன்றும், புதுச்சேரியில் ஒன்றும் அடங்கும். இதில், தமிழகத்தில் நெடுவாசல் பகுதியும், புதுச்சேரியில் காரைக்காலும் தேர்வு செய்யப்பட்டன. இவை இரண்டு பகுதிகளிலும் தற்போது எதிர்ப்பு வலுத்துள்ளது.

  முதலில், ஹைட்ரோ கார்பன் திட்டம் பற்றி விவசாயிகளுக்கு எதுவும் தெரியாததால், ஒரு சிலர் தங்களது நிலங்களை ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு வழங்கினர்.

  ஆனால், ஹைட்ரோ கார்பன் ஆய்வுக்காக தோண்டப்பட்ட கிணறுகளில் இருந்து வெளியான எண்ணெய் போன்ற திரவத்தினால், அருகில் இருந்த விவசாய நிலங்கள் பாழனதாலும், அவை அடிக்கடி தீப்பற்றி எரிவதும் விவசாயிகளை அதிருப்திக்குள்ளாக்கியது.

  அப்போதுதான், ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து விவசாயிகளுக்கு இளைஞர்கள் மூலமாக விளக்கங்கள் தரப்பட்டு தற்போது போராட்டமாக வெடித்துள்ளது.

  இந்தியாவில் தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மட்டுமே இதற்கு எதிர்ப்பு எழுந்திருக்கிறது என்று எடுத்துக் கொள்ள முடியாது. ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு, தமிழகத்தின் எதிர்ப்பு ஊடகங்கள் வாயிலாக மற்ற மாநிலங்களுக்கும் பரவும் என்ற நிலை உள்ளது.

  ஏற்கனவே மத்திய அரசு கொண்டு வந்த மீத்தேன் திட்டம், தமிழக விவசாயிகளின் போராட்டத்தைத் தொடர்ந்து மத்திய அரசால் கைவிடப்பட்டதைப் போல, ஹைட்ரோ கார்பன் திட்டமும் கைவிடப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

  இதற்கிடையே, விவசாயிகளை பாதிக்கும் எந்த திட்டத்தையும் தமிழக அரசு செயல்படுத்தாது. ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி அளிக்காது என்றும், நெடுவாசல் போராட்டத்தை திரும்பப் பெறுமாறும் முதல்வர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai