சுடச்சுட

    

    கங்கையை தூய்மைப்படுத்தும் திட்டம்: பாட்னாவில் ரூ.1,050 கோடியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள்

    By DIN  |   Published on : 02nd March 2017 12:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கங்கை நதி மாசுபடுவதை தடுப்பதற்காக, பிகார் மாநிலம், பாட்னாவில் 2 கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களும் இதர கட்டமைப்புகளும் ஏற்படுத்தப்படவிருக்கின்றன; இதற்காக ரூ.1050 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்களை, தனியார் நிறுவனங்களுக்கு மத்திய அரசு வழங்கியுள்ளது.
    இதுதொடர்பாக மத்திய நீர்வளத் துறை புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
    கங்கை நதியை தூய்மைப்படுத்தும் திட்டத்தின்கீழ், பிகார் மாநிலம், பாட்னாவில் 2 கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை அமைப்பதற்கும், ஏற்கெனவே உள்ள ஒரு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை புதுப்பிக்கவும், 2 உந்து நிலையங்கள் மற்றும் 407 கிமீ தொலைவுக்கு தரைக்கடியில் கழிவு நீர் குழாய்களை பதிப்பதற்கும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
    அதன்படி, சயீத்பூர் மண்டலத்தில் நாளொன்றுக்கு சுமார் 6 கோடி லிட்டர் கழிவுநீரை சுத்திகரிக்கும் திறன் கொண்ட கட்டமைப்பை ஏற்படுத்தவும், 227 கிமீ தொலைவுக்கு தரைகீழ் கழிவுநீர் குழாய்கள் பதிக்கும் பணிகளை மேற்கொள்ளவும் ரூ.600 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் இரு தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
    இதேபோல, பெயூர் மண்டலத்தில் தினமும் சுமார் 2.3 கோடி லிட்டர் கழிவுநீரை சுத்திகரிக்கும் திறன்கொண்ட கட்டமைப்பை ஏற்படுத்தவும், ஏற்கெனவே உள்ள ஒரு சுத்திகரிப்பு நிலையத்தை புதுப்பிக்கவும், 180 கிமீ தொலைவுக்கு நிலத்தடி கழிவு நீர் குழாய் கட்டமைப்பை ஏற்படுத்தவும் 3 தனியார் நிறுவனங்களுக்கு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
    மேலும், இந்த இரு மண்டலங்களிலும் 2 உந்து நிலையங்களை ஏற்படுத்தும் பணிகளுக்கான ஒப்பந்தங்களும் வழங்கப்பட்டுள்ளன.
    இப்பணிகளை, தேசிய கங்கை தூய்மைப் பணி திட்டக் குழு கண்காணிக்கும். பாட்னாவின் இதர மண்டலங்களிலும் கழிவுநீர் சுத்திகரிப்பு தொடர்பான திட்டங்களுக்கு விரைவில் ஒப்பந்தங்கள் வழங்கப்படும் என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai