கொலீஜியம் முறைக்கு எதிரான மனு தள்ளுபடி
By DIN | Published on : 02nd March 2017 01:11 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
நீதிபதிகள் நியமனங்களை மேற்கொள்ளும் உச்ச நீதிமன்ற கொலீஜியம் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுவை தில்லி உயர் நீதிமன்றம் புதன்கிழமை தள்ளுபடி செய்தது.
இந்த விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை தில்லி உயர் நீதிமன்றத்தின் ஒருநபர் நீதிபதி அமர்வு ஏற்கெனவே விசாரித்து தள்ளுபடி செய்திருந்தது. இதை எதிர்த்து வழக்குரைஞர் ஆப்.பி. லூத்ரா தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு, தில்லி உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி ஜி.ரோஹிணி, நீதிபதி சங்கீதா திங்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் புதன்கிழமை விசாரணை நடைபெற்றது.
அப்போது, ’ஒரு நபர் நீதிபதி அமர்வின் உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது' என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
முன்னதாக நடைபெற்ற இந்த வழக்கின் விசாரணையின்போது, ’கொலீஜியம் முறையில் மேற்கொள்ளப்படும் நீதிபதிகள் நியமனத்தில் வெளிப்படைத்தன்மை இல்லாததால் அது அடிப்படை உரிமையை பாதிக்கிறது' என்று வழக்குரைஞர் லூத்ரா வாதிட்டார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கூடுதல் சொலிசிட்டர் ஜனரல் சஞ்சய் ஜெயின், ’அனைத்து வழக்குரைஞர்களையும் நீதிபதி பணியிடங்களுக்கு பரிந்துரைக்கப்படுவதில்லை என்பதால், மனுதாரரின் வாதம் ஏற்புடையதல்ல' என்று கூறினார்.
கடந்த ஆண்டு மார்ச் மாதமும் இதேபோல் கொலீஜியம் முறைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட இரண்டு மனுக்களை தில்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.