சுடச்சுட

    

    சட்ட மேலவைத் தேர்தல்: வேட்பாளர்களுக்கு செலவு உச்ச வரம்பை நிர்ணயிக்க திட்டம்

    By DIN  |   Published on : 02nd March 2017 12:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மாநில சட்ட மேலவைத் தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு, செலவு உச்ச வரம்பினை நிர்ணயிக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
    மேலும், இதுதொடர்பான வரைவு அறிக்கையையும் மத்திய அரசின் ஒப்புதலுக்காக தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ளது.
    இந்தியாவில் ஜம்மு-காஷ்மீர், ஆந்திரம், பிகார், உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரம், கர்நாடகம், தெலங்கானா ஆகிய 7 மாநிலங்களில் மட்டுமே சட்ட மேலவை செயல்பட்டு வருகிறது.
    இந்த சட்ட மேலவைகளுக்கு ஆறு ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்படுவது வழக்கம்.
    தேர்தல் செலவு உச்ச வரம்பு...: இந்நிலையில், இந்த சட்ட மேலவைகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்களுக்கு தேர்தல் செலவு உச்ச வரம்பை நிர்ணயிக்க வேண்டும் என மத்திய அரசிடம் தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
    இதுகுறித்து, மத்திய சட்ட அமைச்சகத்துக்கு தேர்தல் ஆணையம் அண்மையில் அனுப்பியுள்ள வரைவு அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
    சட்டப்பேரவைத் தேர்தல்களைப் போல், சட்ட மேலவைத் தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கும் தேர்தல் செலவு உச்ச வரம்பை நிர்ணயிக்க வேண்டும். இதுவரை அவ்வாறு நிர்ணயிக்கப்படாததால், சட்ட மேலவைத் தேர்தல்களில் கருப்புப் பணப் புழக்கம் அதிகரித்துள்ளது.
    எனவே, குறிப்பிட்ட மாநிலத்தின் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள செலவுத் தொகையில் பாதியை, அந்த மாநில சட்ட மேலவைக்குப் போட்டியிடும் வேட்பாளரின் தேர்தல் செலவு உச்ச வரம்பாக நிர்ணயிக்க வேண்டும். அதற்கேற்ப, மக்கள் பிரநிதித்துவச் சட்டத்தில் திருத்தமும் கொண்டு வர வேண்டும் என அந்த வரைவு அறிக்கையில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
    சட்ட அமைச்சகம் பதில்: தேர்தல் ஆணையத்தின் இந்த வரைவு அறிக்கைக்கு மத்திய சட்டத்துறை அமைச்சகம் பதிலளித்துள்ளது. அதில், இந்த விவகாரம் தொடர்பாக சட்ட மேலவைகள் செயல்படும் மாநிலங்கள் மற்றும் அங்குள்ள அரசியல் கட்சிகளின் கருத்துகளை அறிவது அவசியம். அதன் பின்னரே, இந்த விவகாரத்தில் சட்டத்திருத்தம் கொண்டு வர முடியும் என சட்ட அமைச்சகம் தெரிவித்துள்ளது.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai