சுடச்சுட

    

    ஜேட்லியின் வங்கிக் கணக்கு விவரங்கள்: கேஜரிவாலின் மனுவை தள்ளுபடி செய்தது தில்லி உயர் நீதிமன்றம்

    By DIN  |   Published on : 02nd March 2017 01:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    DelhiHighCourtlogo

    மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லியின் வங்கிக் கணக்கு விவரங்கள் உள்பட பல்வேறு நிதி விவரங்களை சமர்ப்பிக்கக் கோரிய தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலின் மனுவை தில்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
    தில்லி மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் (டிடிசிஏ) தலைவராக கடந்த 2013-ஆம் ஆண்டு வரை 13 ஆண்டுகளாக அருண் ஜேட்லி பதவி வகித்த காலத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் குற்றம்சாட்டினார். இந்தக் குற்றச்சாட்டை அருண் ஜேட்லி திட்டவட்டமாக மறுத்தார்.
    மேலும், தனது நற்பெயருக்கு கலங்கம் ஏற்படுத்த முயன்றதாகவும், அதற்கு நஷ்ட ஈடாக ரூ.10 கோடி அளிக்க வேண்டும் என்றும் கேஜரிவால், ஆம் ஆத்மி மூத்த தலைவர்கள் ராகவ் சதா, குமார் விஷ்வாஸ், ஆசுதோஷ், சஞ்சய் சிங், தீபக் பாஜ்பாய் ஆகியோருக்கு எதிராக ஜேட்லி அவதூறு வழக்கு தொடுத்தார்.
    இந்த வழக்கின் விசாரணை தில்லி உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
    இந்நிலையில், கடந்த 1999-2000-ஆம் நிதியாண்டு முதல், 2014-15-ஆம் நிதியாண்டு வரையிலான அருண் ஜேட்லியின் வங்கிக் கணக்கு விவரங்கள், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு உள்ள பங்கு உள்ளிட்ட நிதிசார்ந்த விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிடுமாறு கேஜரிவால் சார்பில் தில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
    அந்த மனு நீதிபதி ராஜீவ் சஹாய் எண்ட்லா முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.
    அப்போது, ’இதுபோன்ற விவரங்களை அளிக்குமாறு உத்தரவிட முடியாது' என்று கூறி அந்தக் கோரிக்கை மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.
    மேலும், ஜேட்லி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட சாட்சியங்களின் ஒரு பகுதியை நீக்க வேண்டும் என்ற கேஜரிவாலின் கோரிக்கையையும் நீதிபதி நிராகரித்தார்.
    இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக கேஜரிவாலின் வழக்குரைஞர் அனுபம் ஸ்ரீவஸ்தவா தெரிவித்தார்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai