சுடச்சுட

    

    மும்பை தாக்குதல் வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும்: பாகிஸ்தானிடம் இந்தியா வலியுறுத்தல்

    By DIN  |   Published on : 02nd March 2017 01:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மும்பையில் கடந்த 2008-ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் குறித்து பாகிஸ்தானில் நடைபெற்று வரும் வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று அந்நாட்டிடம் இந்தியா வலியுறுத்தியுள்ளது.
    மும்பைத் தாக்குதல் தொடர்பாக இந்திய நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றதைப் போல, பாகிஸ்தான் நீதிமன்றத்திலும் தனியே விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விசாரணைக்காக இந்தியத் தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ள 24 சாட்சிகளை பாகிஸ்தானுக்கு அனுப்ப வேண்டும் என்று அந்நாட்டு அரசு கோரிக்கை விடுத்திருந்தது.
    இதற்கு, இந்த வழக்கை மறுவிசாரணை நடத்த வேண்டும் என்றும், ஜமாத்-உத்-தவா தலைவர் ஹபீஸ் சயீதையும், லஷ்கர்-ஏ-தொய்பா தலைவர் ஜகியூர் ரஹ்மான் லக்வியையும் வழக்கில் சேர்க்க வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தியுள்ளது. இந்த தகவலை லாகூரில் பாகிஸ்தான் உள்துறை அமைச்சக மூத்த அதிகாரி ஒருவர் பிடிஐ செய்தியாளரிடம் தெரிவித்தார்.
    இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ’ஹபீஸ் சயீதுக்கு எதிராக உறுதியான ஆதாரத்தை இந்தியா அளித்தால், அவரை விசாரிக்க பாகிஸ்தான் தயாராக உள்ளது. லக்விக்கு எதிராக போதிய ஆதாரம் இல்லாததாலேயே அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்' என்றார்.
    ஹபீஸ் சயீது உள்ளிட்ட 5 பயங்கரவாதிகளை பாகிஸ்தான் அரசு அண்மையில் கைது செய்து வீட்டுக் காவலில் வைத்தது. இந்நிலையில், இந்தியா இவ்வாறு வலியுறுத்தியிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.
    ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு: இதனிடையே, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் 34-ஆவது அமர்வில் இந்தியத் தூதர் அஜித் குமார் பேசியபோது, பயங்கரவாத அமைப்புகளை உருவாக்கியது பாகிஸ்தான்தான் என்று குற்றம்சாட்டினார்.
    அப்போது அவர் கூறுகையில், ’இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாத அமைப்புகளை உருவாக்கியது, பாகிஸ்தான்தான்; அந்த கெட்ட சக்தி தற்போது தன்னைத் தோற்றுவித்தவரையே அழிக்கத் தொடங்கிவிட்டது. சர்வதேச அளவில் தேடப்படும் பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் கடந்த 20 ஆண்டுகளாக இருக்கின்றனர்' என்றார்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai