சுடச்சுட

  

  முஸ்லிம் பெண்கள் உரிமை பற்றி பேசுவதற்கு அனுமதி மறுப்பு: ஜாமியா பல்கலை. மீது பாஜக தலைவர் குற்றச்சாட்டு

  By DIN  |   Published on : 02nd March 2017 01:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  முஸ்லிம் பெண்களுக்கான பிரச்னைகள் குறித்த கருத்தரங்கின் பேச்சாளர் பட்டியலில் இருந்து தனது பெயரை நீக்குவதற்கு நிகழ்ச்சி ஒருங்கிணைப்புக் குழுவுக்கு தில்லி ஜாமியா பல்கலைக்கழகம் நெருக்கடி கொடுத்ததாக பாஜகவின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான ஷாஜியா இல்மி குற்றம் சாட்டியுள்ளார்.
  இதுதொடர்பாக, தில்லியில் செய்தியாளர்களிடம் அவர், புதன்கிழமை கூறியதாவது: ஜாமியா பல்கலைக்கழகத்தில் முஸ்லிம் பெண்களின் பிரச்னைகள் தொடர்பான கருத்தரங்கு செவ்வாய்க்கிழமை (பிப்.28) நடைபெற்றது. அதில், மும்முறை ’தலாக்' கூறி விவகாரத்து பெறும் முறை குறித்துப் பேசுவதற்காக, ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஆதரவு பெற்ற தேசியப் பாதுகாப்பு விழிப்புணர்வு அமைப்பு எனக்கு அழைப்பு விடுத்திருந்தது.
  பின்னர், அந்தத் தலைப்புக்குப் பதிலாக, ’’முஸ்லிம் பெண்களின் அதிகாரம்: பிரச்னைகளும் சவால்களும்'' என்ற தலைப்பில் பேச வேண்டும் என்று நிகழ்ச்சி ஒருங்கிணைப்புக் குழுவுக்கு பல்கலைக்கழக நிர்வாகம் நெருக்கடி கொடுத்தது. பிறகு பேச்சாளர்கள் பட்டியலில் இருந்தே எனது பெயர் நீக்கப்பட்டுவிட்டது.
  அந்தக் கருத்தரங்கில் பேசுவதற்கு என்னை அனுமதிக்குமாறு பல்கலைக்கழக நிர்வாகத்திடம் நிகழ்ச்சி ஒருங்கிணைப்புக் குழு கோரிக்கை விடுத்தது. ஆனால், என்னால் பிரச்னை உருவாகும் என்று கூறி பல்கலைக்கழக நிர்வாகம் அனுமதி மறுத்துவிட்டது. சில மாணவர்களும் என்னைத் தடுத்து நிறுத்துவதற்காக பல்கலைக்கழக வளாகம் முன் திரண்டிருந்தனர் என்றார் அவர்.
  ஒருங்கிணைப்புக் குழு குற்றச்சாட்டு: இதே குற்றச்சாட்டுகளை நிகழ்ச்சி ஒருங்கிணைப்புக் குழுவும் முன்வைத்துள்ளது. இதுதொடர்பாக அந்தக் குழுவின் தலைவர் ஷைலேஷ் வத்ஸ் கூறுகையில், ’’கருத்தரங்கின் விவாதப் பொருள், பேச்சாளர்கள் பட்டியலை நாங்கள் இறுதிசெய்தபோது, அதில் சில மாற்றங்களை செய்யுமாறு பல்கலைக்கழக நிர்வாகம் அறிவுறுத்தியது; இதுபோன்ற விவாதம் நடத்துவதற்கு உகந்த சூழல் தற்போது பல்கலைக்கழகத்தில் இல்லை என்றும் அதன் நிர்வாகம் விளக்கம் அளித்தது'' என்றார்.
  பல்கலை. நிர்வாகம் மறுப்பு: ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை பல்கலைக்கழக நிர்வாகம் மறுத்துள்ளது. இதுதொடர்பாக, அந்தப் பல்கலைக்கழகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறியதாவது:
  அந்த கருத்தரங்கை பல்கலைக்கழக நிர்வாகமோ, பல்கலைக்கழகத்தின் ஏதேனும் ஒரு துறையோ ஏற்பாடு செய்யவில்லை. பல்கலைக்கழகத்தின் அரங்கம் மட்டுமே நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு வாடைக்கு விடப்பட்டது. ஆனால், அந்தக் கருத்தரங்கின் விவாதப் பொருள், பேச்சாளர்கள் தேர்வு ஆகியவற்றில் பல்கலைக்கழக நிர்வாகம் தலையிடவில்லை என்றார் அவர்.
  காங்கிரஸ், ஆம் ஆத்மிக்கு சவால்: இதனிடையே, ’இந்திய ராணுவ வீரர்களின் மரணத்துக்கு பாகிஸ்தானைக் குறை கூற வேண்டாம்' என்று கூறிய தில்லி பல்கலைக்கழக மாணவியும், போரில் உயிரிழந்த ராணுவ வீரரின் மகளுமான குர்மெஹர் கெளரின் கருத்தை ஆதரிக்கும் காங்கிரஸ் கட்சியும், ஆத்மி கட்சியும், பாகிஸ்தானைக் குறை கூற வேண்டாம் என்று நேரடியாகக் கூறி பேரணி நடத்தத் தயாரா? என்று ஷாஜியா இல்மி கேள்வி எழுப்பினார்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai