சுடச்சுட

    

    ரூபாய் நோட்டு வாபஸ் மீதான விமர்சனம் தவறானது என்பதை பொருளாதார வளர்ச்சி காட்டுகிறது

    By DIN  |   Published on : 02nd March 2017 01:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    arunjetly

    ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை குறித்து பலரும் தவறாக மிகைப்படுத்தி விமர்சித்துள்ளனர் என்பதை பொருளாதார வளர்ச்சி குறித்த அறிக்கை தெளிவாக்கியுள்ளதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.
    மத்திய புள்ளியியல் துறை வெளியிட்டுள்ள அறிவிக்கையில், 2016-17-ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 7 சதவீதமாக இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
    முன்னதாக, ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையின் தாக்கத்தால் 3-ஆவது காலாண்டில் பொருளாதார வளர்ச்சி 6.4 சதவீதமாக இருக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் சிலர் கூறியிருந்தனர். மேலும், சிலர் வளர்ச்சி 6 சதவீதத்துக்கு கீழ் குறையும் என்றும் தெரிவித்திருந்தனர்.
    இந்நிலையில், பிரிட்டன் பயணத்தை முடித்துக் கொண்டு தில்லிக்கு புதன்கிழமை வந்த அருண் ஜேட்லி கூறியதாவது:
    பழைய உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெற்று, புதிய நோட்டுகளை புழக்கத்தில் விட்டதன் மூலம் பொருளாதார மறுமலர்ச்சி ஏற்படும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேலின் கருத்து உண்மையாகி வருகிறது.
    உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெறுவது என்ற பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கையை மத்திய அரசு எடுத்தபோது, இதனால் பொருளாதார வளர்ச்சி வெகுவாக பாதிக்கப்படும் என்று பலர் குறை கூறினர். ஆனால், நடப்பு நிதியாண்டின் 3-வது காலாண்டில் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாக உள்ளது.
    இது, நமது பொருளாதாரம் குறித்து ஏற்பட்டிருந்த அச்சத்தைப் போக்கியிருப்பதுடன், ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை குறித்த பல தவறான மிகைப்படுத்தல்களையும் பொய் என்பதை உணர்த்தியுள்ளது. ரொக்கம் அதிக அளவில் புழங்கும் கருப்புப் பொருளாதார நடவடிக்கைகளைத்தான் ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை முடக்கியுள்ளது.
    முன்னெப்போதும் இல்லாத வகையில் இப்போது வேளாண்மை துறையின் வளர்ச்சி உச்சத்தில் உள்ளது. உற்பத்தித் துறையிலும் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இவைதான் பொருளாதார வளர்ச்சியில் எதிரொலித்துள்ளன என்றார் ஜேட்லி.
    கணக்கீட்டில் காங்கிரஸ் சந்தேகம்: இது தொடர்பாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஆனந்த் சர்மா கூறியதாவது:
    பொருளாதார வளர்ச்சி குறித்து கொடுக்கப்பட்டுள்ள விவரங்களில் சந்தேகம் உள்ளது. பிரதமர் நரேந்திர மோடியும், நிதியமைச்சர் அருண் ஜேட்லியும் இணைந்து நாட்டு மக்களுக்கு தவறான தகவல்களைத் தருகிறார்கள். இதனால், சர்வதேச அளவில் இந்தியாவின் நம்பகத்தன்மை பெரிதும் பாதிக்கப்படும்.
    ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையின் மோசமான விளைவுகளான உற்பத்தி குறைவும், வேலையிழப்பும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டதாகத் தெரியவில்லை. சிறு, குறு, நடுத்தர தொழில் துறையில் ஏராளமான வேலையிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இது தொடர்பான விவரங்களை கணக்கில் எடுத்துக் கொள்ள முடியவில்லை என்றுதான் மத்திய புள்ளியியல் துறை ஏற்கெனவே கூறியுள்ளது.
    பொருளாதார வளர்ச்சி தொடர்பான அறிக்கையில் ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட பிரிவினர் குறித்த தகவல்கள் சேர்க்கப்படவில்லை. ரூபாய் நோட்டு வாபஸுக்குப் பிறகு இந்தியப் பொருளாதாரத்துக்கு ரூ.2.5 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக பல்வேறு அமைப்புகள் கணித்துள்ளன என்றார் அவர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai