சுடச்சுட

    

    ஆபாச நடனத்துக்குத் தடை: மகாராஷ்டிர அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

    By DIN  |   Published on : 03rd March 2017 12:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    supreme_court

    ஹோட்டல்கள், சொகுசு விடுதிகள் உள்ளிட்டவற்றில் ஆபாச நடனத்துக்கு தடை விதிக்கும் சட்டத்தை ரத்து செய்யக் கோரும் மனுவுக்கு பதிலளிக்குமாறு மகாராஷ்டிர அரசுக்கு உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
    இதுகுறித்து ’பாரதிய நடன விடுதி பெண்கள் அமைப்பு' தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
    மகாராஷ்டிரத்தில் உள்ள ஹோட்டல்கள், சொகுசு விடுதிகள், நடன விடுதிகள் ஆகியவற்றில் பெண்கள் நடனமாடுவதற்கு தடை விதிக்கப்பட்டிருப்பது அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானதாகும். நாட்டில் உள்ள அனைவருக்கும் தாங்கள் வாழ்வதற்காக பொருள் ஈட்டும் உரிமையை இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ளது.
    அதேபோல், நாடகக் கலை, நடனக் கலை மூலமாக தங்களது திறனை வெளிப்படுத்தும் உரிமையும் பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
    இந்த அனைத்து உரிமைகளையும் எங்களிடமிருந்து பறிக்கும் வகையில் மகாராஷ்டிர அரசு உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக, இந்தச் சட்டத்தில் ’ஆபாச நடனம்' என்ற வார்த்தை பிரயோகிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதற்கான தெளிவான விளக்கத்தை அரசு அளிக்கவில்லை. இதன் காரணமாக, ஹோட்டல்களில் நடனமாடும் பெண்களை போலீஸார் துன்புறுத்துவதற்கு இடமளிக்கப்பட்டுள்ளது.
    இந்தியாவைப் பொருத்தவரை, நடனமாடுவதும், நடனக் கலைஞர்களுக்கு பார்வையாளர்கள் பரிசுகள் வழங்குவதும் காலம் காலமாக தொடர்ந்து வரும் பழக்கமாகும். மகாராஷ்டிரத்தின் பாரம்பிய நடனங்களான முஜ்ரா, லாவணி ஆகியவற்றிலும் இந்த வழக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது.
    இதுபோன்ற நடனங்களும், சம்பிரதாய பழக்க வழக்கங்களும் நாடு முழுவதும் பரவிக் கிடக்கின்றன. ஆனால், எங்கள் நடனத்துக்கு மட்டும் அரசு தடை விதித்திருப்பது முரணாக உள்ளது. எனவே, இந்தத் தடைச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
    இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் தீபக மிஸ்ரா, ஆர்.எஃப். நாரிமன் ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த மனுவுக்கு 4 வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு மகாராஷ்டிர அரசுக்கு உத்தரவிட்டது.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai