இணைய வழியில் ரயில் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்ய விரைவில் ஆதார் எண் கட்டாயம்
By DIN | Published on : 03rd March 2017 01:12 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

இணைய வழியில் ரயில் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்வதற்கு ஆதார் எண் கட்டாயமாக்கப்பட உள்ளது.
இதுதொடர்பாக, ரயில்வே அமைச்சகத்தின் மூத்த அதிகாரியொருவர் வியாழக்கிழமை கூறியதாவது:
ரயில்வே இணையதளம் வாயிலாக பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்வதற்கு, ஆதார் எண் கட்டாயமாக்கப்பட உள்ளது. அந்த தளத்தில் முதன்முறையாக பதிவு செய்யும்போது, ஆதார் எண்ணை குறிப்பிட்டாக வேண்டும். இந்த நடைமுறை விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது.
தற்போது, சில இடைத் தரகர்கள் இணைய வழியில் போலியான பெயர்களில் முன்பதிவு செய்து பயணச்சீட்டுகளை பெற்று அவற்றை அதிக விலைக்கு வேறு நபர்களுக்கு விற்றுவிடுகின்றனர்.
ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்ட பின்பு, இத்தகைய மோசடிகள் நடைபெறுவதற்கு வாய்ப்பில்லாமல் போகும்.
இந்தத் திட்டத்தை நடைமுறைபடுத்துவதற்குத் தேவைப்படும் பிரத்யேக மென்பொருளை அமைச்சகம் உருவாக்கி வருகிறது. 2017-18 நிதியாண்டுக்கான துறை ரீதியிலான கொள்கைகளை ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு வியாழக்கிழமை வெளியிட்டுள்ளார்.
இதன்படி, இணைய வழியில் ரயில் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்வதற்கு ஆதார் எண் கட்டாயமாக்கப்படும்.
மேலும், பயணச்சீட்டுகளைப் பெறுவதற்கு ரொக்கமில்லா பரிவர்த்தனை ஊக்குவிக்கப்படும்.
இதற்காக, நாடு முழுவதிலுமுள்ள ரயில் நிலையங்களில் 6,000 மின்னணு பணம் செலுத்தும் இயந்திரங்களும், 1,000 தானியங்கி பயணச்சீட்டு வழங்கும் இயந்திரங்களும் நிறுவப்படும்.
மலைப் பிரதேசங்களுக்கு புதிதாக சுற்றுலா ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. மேலும், பயணிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும் என்றார் அந்த அதிகாரி.
இந்நிலையில், ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் மூத்த குடிமக்கள் ரயில் பயணச் சலுகையைப் பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.